முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் மீண்டும் ரெய்டு..!

14 இடங்களில் காலை முதல் சோதனை நடைபெறுகிறது..!

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் மீண்டும் ரெய்டு..!

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, கடந்த அதிமுக ஆட்சியில் பதவியில் இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில், அவருக்கு சொந்தமான 69 இடங்களில் கடந்த 15ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் ஈரோடு, வேலூர், சேலம் , கரூர், திருப்பூர், கோவை, சென்னை ஆகிய மாவட்டங்கள் கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தங்கமணிக்கு தொடர்புடைய 69 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் கணக்கில் வராத 2 கோடியே 16 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் ரொக்கம், செல்போன்கள், ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக  தகவல்கள் வெளியாகின.  

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனையை தொடங்கியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 10 இடங்கள், ஈரோட்டில் 3 இடங்கள் மற்றும் சேலத்தில் ஒரு இடம் என 14 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதுவரை ரெய்டு நடைபெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர்களில் இரண்டாவது முறையாக ரெய்டு நடத்தப்படுவது இதுவே முதன்முறை எனக் கூறப்படுகிறது.