தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்...

தனியார் மருத்துவமனைகளில் நாளை முதல் சிஎஸ்ஆர் நிதிப் பங்களிப்பில் இலவச தடுப்பூசி திட்டம்.

தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்...
பெரு நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதிப் பங்களிப்பில்  தமிழகம் முழுவதும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் தனியார் மருத்துவமனையில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாட்டிலேயே முதன் முதலில் தமிழகத்தில் நாளை துவங்கப்பட உள்ளது.
 
முதற்கட்டமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற உள்ள இந்த இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாளை துவக்கி வைக்க உள்ளார்.
 
அங்கு சிஎஸ்ஆர் நிதிப் பங்களிப்பில் தமிழகம் முழுவதும் அரசு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
 
இதுவரை மத்திய அரசிடமிருந்து தமிழக சுகாதாரத் துறைக்கு 2.01 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் 1.97 கோடி தடுப்பூசிகள் இலவசமாக பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
 
அதேபோல் தனியார் மருத்துவமனைகளில் பொறுத்தமட்டில் தற்போது வரை 20.32 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் 14.22 லட்சம் தடுப்பூசிகள்  கட்டண அடிப்படையில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 
 
மத்திய அரசின் தொகுப்பில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளில் அரசின் இலவச தடுப்பூசி திட்டத்தில் 98% தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  அதே சமயம் தனியார் மருத்துவமனைகளில் 70% தடுப்பூசிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில் தனியார் வசம் மீதமுள்ள தடுப்பூசிகளையும் பயன்படுத்தி பொதுமக்களுக்கு இலவசமாக விரைந்து தடுப்பூசி செலுத்திட இந்தத் திட்டம் பயன் பெறும் என சுகாதாரத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.