அடக்கம் செய்யப்பட்ட முத்துமனோவின் உடலுக்கு அரிவாள் வைத்து சபதம் எடுத்த நண்பர்கள்...

நெல்லை அருகே பாளையங்கோட்டை மத்திய சிறையில் கொல்லப்பட்ட முத்துமனோவின் உடலில் அரிவாளை வைத்து அடக்கம் செய்து அவரது நண்பர்கள் சபதம் செய்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடக்கம் செய்யப்பட்ட முத்துமனோவின் உடலுக்கு அரிவாள் வைத்து  சபதம் எடுத்த நண்பர்கள்...

நெல்லை மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாபநாசம் என்ற விவசாயியின் மகன், முத்து மனோ. சட்டக் கல்லூரி மாணவரான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் ஏப்ரல் 8-ம் தேதி இளைஞர் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டி கொல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டார்.

 ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை, ஏப்ரல் 22-ம் தேதி நாங்குநேரி நீதிமன்ரத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். பாதுகாப்பு காரணமாக அந்த சிறையில் சில சமூகத்தினருக்கு தனியாக பிளாக்குகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்,பொதுப் பிரிவினருக்கான பிளாக்கில் அடைக்கப்பட்டார்.

 முத்து மனோ சிறைச்சாலைக்குள் சென்றதும் அவரை எதிர்பார்த்துக் காத்திருந்தது போல அங்கிருந்த சக கைதிகள் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அதனால் முகம், தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த அவர், சிறைக்குள் அடைக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தார்.

 சிறைத்தறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் இந்த கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை என முத்து மனோவின் பெற்றோரும் உறவினர்களும் குற்றம் சாட்டினர். அதனால் சிறைத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.அதிகாரிகளுடன் நடந்த பல கட்டப் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாததால் 72 நாள்களாக உடலை வாங்க மறுத்து போராட்டம் தொடர்ந்தது.

 இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அவரது உடலைப் பெற்ற உறவினர்கள் சொந்த ஊரில் அடக்கம் செய்தனர்.அவரது நண்பர்கள் சிலர் உடல் மீது அரிவாளை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அத்துடன், அவரது மரணத்துக்கு நியாயம் கிடைக்கச் செய்வதாகவும் சபதம் ஏற்றுக் கொண்டார்கள். அரிவாளுடன் முத்து மனோ உடல் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.