தகவல் தொழில்நுட்ப கொள்கையில் மாற்றம் கொண்டு வர தமிழக அரசு திட்டம்: அமைச்சர் மனோ தங்கராஜ்

ஐடி முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப கொள்கையில் மாற்றம் கொண்டு வருவதற்கு  தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக  அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்ப கொள்கையில் மாற்றம் கொண்டு வர தமிழக அரசு திட்டம்: அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாட்டில்  தகவல் தொழில்நுட்ப துறையை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தியுள்ளதாக கூறினார்.முதற்கட்டமாக இணையத்தை தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 618 கிராம பஞ்சாயத்துகளிலும்  பரவலாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் கிராமங்களில் கூட  தகவல் தொழில்நுட்பம் சார்ந்து பிபிஓ நிறுவனங்களை தொடங்கமுடியும் என கூறினார்.

நகர்புறங்களில் இணைய சேவை இருந்தாலும் தடையின்றி கிடைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறிய அமைச்சர்,சென்னை மட்டுமல்லாது தென்மாவட்டங்களிலும் ஐடி தொழிற்பூங்காவை கொண்டு வருவதற்கு அரசு முயற்சித்து வருவதாகவும், இதற்கு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப கொள்கையில் மாற்றம் கொண்டு வரவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக  அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் படிக்கும் தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் கடமை அரசுக்கு உள்ளதாகவும், அதன் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப துறையில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.