ஆளுநர் உரை...வானதி வைத்த குற்றச்சாட்டு.. ஆதாரத்துடன் பதிலடி தந்த தென்னரசு!!!

ஆளுநர் உரை...வானதி வைத்த குற்றச்சாட்டு.. ஆதாரத்துடன் பதிலடி தந்த தென்னரசு!!!

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் ஆளுநர் உரையாற்றினார். இந்த உரையில் சிலவற்றை ஆளுநர் வேண்டுமென்றே பேசாமல் தவிர்த்திருந்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.  இதனால் சட்டப்பேரவையின் மரபுகளை மீறி சில விஷயங்கள் நடந்துள்ளது. 

எழுந்துள்ள சந்தேகங்கள்:

இதனால் ஆளுநர் உரை என்பது என்ன என்ற கேள்வியுடன் தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்படும் அந்த உரையானது எத்தனை நாட்களுக்கு முன்னர் ஆளுநரிடம் கொடுக்கப்பட வேண்டும் போன்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.  

புறக்கணிக்கப்பட்ட வார்த்தைகள்:

தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட உரையில் சில வார்த்தைகளை ஆளுநர் வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.  

பெரியார், அண்ணா என்ற பெயர்களையும் அம்பேத்கர் பெயரையும் வாசிக்க ஆளுநர் தவிர்த்து விட்டார் என திமுக கூட்டணி கட்சிகள் குற்றச்சாட்டை எழுப்பின.  தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்பதை வாசிக்க ஆளுநர் தவிர்த்து விட்டார் எனவும் அவை தெரிவித்தன.  மேலும் திராவிட மாடல் என்ற வார்த்தையை ஆளூநர் தவிர்த்தது ஏன் என்ற கேள்வியும் காங்கிரஸ் சார்பில் எழுப்பப்பட்டது.

செல்வ பெருந்தகை:

இது குறித்து பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை தமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டு தேவையான நலத்திட்டகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தொகுத்து அதனை ஆளுநரிடம் படிக்க வழங்கி இருந்தது எனவும் அதை தான் ஆளுநர் வாசிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.  ஆனால் அவர் அவருடைய இஷ்டத்திற்கு வாசிக்கிறார் எனவும் இது அரசியலமைப்பை மீறுவதாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

இந்நிலையில் மறுபுறம் சட்டப்பேரவையில் ஆளுநரின் உரையை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசு தயாரித்துகொடுத்த உரையை ஆளுநர் முழுமையாக வாசிக்கவில்லை எனக் கூறி அவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரையின் நகலில் உள்ள வாக்கியங்கள் மட்டுமே அவை குறிப்பில் பதிவேற்றப்படும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானம் உடனடியாக நிறைவேற்றப்பட்டது. 

புதிய முறை:

இப்படி ஆளுநர் உரைக்கு பின்னர் தீர்மானம் முன்மொழியப்படுவது தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் இதுவே முதன்முறை எனக் கூறப்படுகிறது.  

வானதி குற்றச்சாட்டு:

இந்த விமர்சனங்களுக்கு மத்தியில் பாஜகவின் வானதி சீனிவாசன் ஆளுநருக்கு ஆதரவாக அவருக்கு வழங்கப்பட்ட உரையானது தீடிரென வழங்கப்பட்டது எனக் கூறியிருந்தார்.

உடனடியாகவா?:

இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த உரையை தயாரிக்கும் பணியானது அவை தொடங்குவதற்கு 15 நாட்கள் முன்பே தொடங்கப்பட்டுவிடும் என்றும், இவ்வாறு தயாரிக்கப்பட்ட உரையானது ஆளுநருக்கு ஒரு வாரத்திற்கு முன்னரே கொடுக்கப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் அப்படி இல்லையென்றாலும் கூட குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு முன்னரே இந்த உரை ஆளுநருக்கு கொடுக்கப்பட்டுவிடும் என்றும் மூத்த அரசியல் தலைவர்கள் கூறுகின்றனர். எனவே பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியதை போல திடீரென்று உரை ஆளுநருக்கு கொடுக்கப்பட வாய்ப்பில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

தங்கம் தென்னரசின் ஆதாரம்:

இதனை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி செய்துள்ளார்.  அதாவது ஆளுநருக்கான உரை தயாரிக்கப்பட்டு கடந்த 5ம் தேதி முதலமைச்சரின் ஒப்புதல் பெறப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது எனவும் இதனை அவர் கடந்த 7ம் தேதி ஏற்றுக்கொண்டார் எனவும் அவர் கூறியுள்ளார்.  இதற்கு ஆதாரமாக முதலமைச்சர் கையெழுத்திட்ட உரையை, ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக கையெழுத்திடப்பட்ட ஆவணத்தை பத்திரிகையாளர்கள் முன்பு அமைச்சர் தங்கம் தென்னரசு முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  அருகருகே இருக்கை...மீண்டும் இணைவார்களா இபிஎஸ்- ஓபிஎஸ்!!!