வைகையில் கடும் வெள்ளம் :  வெள்ள அபாய எச்சரிக்கை !!

வைகை மற்றும் கொள்ளிடம் ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி ஆற்றில் இறங்கி செல்பி எடுக்கவோ,  குளிக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வைகையில் கடும் வெள்ளம் :  வெள்ள அபாய எச்சரிக்கை !!

வைகை அணை

நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தேனி மாவட்டம் வைகை அணை தனது முழு கொள்ளவான 71 அடியில், 70 அடி எட்டியதால் அணையில் இருந்து 3 ஆயிரத்து 754  கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல், மஞ்சளாறு அணையிலிருந்து வெளியேற்றப்படும் 250 கன அடி உபரி நீரும் வைகை ஆற்றில் வினாடிக்கு சுமார் 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள வைகை ஆற்றின் இரு கரையும் தொட்டவாறு தண்ணீர் சீறிப்பாய்கிறது. 

இதையும் படியுங்கள் : காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்  !!

வெள்ள அபாயம்

இதனால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் இறங்கி  செல்பி எடுக்கவோ, குளிக்கவோ  கூடாது மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவறுத்தி உள்ளார்.  மேலும், வைகை ஆற்றின் கரையோரம் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வைகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தரைப்பாலங்களை மூழ்கடித்தபடி தண்ணீர் பாய்ந்து செல்வதால் அந்த வழியாக போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

இதேபோல், தஞ்சை மாவட்ட காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர வசிக்கும் மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில், அணைக்கு 
வரும் 2 லட்சம் கன அடிநீரும் அப்படியே திறந்து விடப்படுவதால் கொள்ளிடத்தில் இருந்து ஒரு லட்சத்து 26 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால், தஞ்சை மாவட்டம் விளாங்குடியில் திருவையாறையும் - அரியலூர் மாவட்டத்தையும் இணைக்கும் கொள்ளிடம்  கடல் போல் காட்சியளிக்கிறது.  காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால்  கரையோர மக்களுக்கு ஒலி பெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.