இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை திணிக்க கூடாது - மு.க.ஸ்டாலின்!

இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை திணிக்க கூடாது - மு.க.ஸ்டாலின்!

இந்தி பேசாத மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்படக் கூடாது என்று மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க கூட்டத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


மொழிப்போர் தியாகிகள் நினைவை போற்றும் வகையில் திமுக சார்பில், திருவள்ளூரில் வீர வணக்கநாள் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசியவர், இன்று தமிழ்நாடு பகுத்தறிவு கருத்துகளால் உணர்ச்சி பெற்று வீறுகொண்டு எழுந்த வீர வரலாற்றை நினைவுகூறும் நாள் என்று கூறினார்.

இதையும் படிக்க : பாடகி வாணி ஜெயராம் உள்பட...106 பேருக்கு பத்ம விருதுகளை அறிவித்தது மத்திய அரசு...!

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தமிழ்நாடு இதுவரை பல்வேறு மொழிப்போர் களங்களைச் சந்தித்திருக்கிறது என மேற்கோள்காட்டிய அவர், நேருவின் வாக்குறுதியின்படி இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் தொடர வேண்டும் என கேட்டுக்கொண்டார். சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்காடு மொழியாக தமிழை மாற்ற வேண்டும் என கூறியவர்,  தாம் எந்த மொழிகளுக்கும் எதிரி அல்ல எனவும் தெரிவித்தார். 

மேலும் ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்தோடு இந்தியை திணிக்க நினைத்தால் அதனை தாம் ஏற்க மாட்டோம் என கூறினார். திராவிட மாடல் ஆட்சி கடந்த 20 மாதங்களில் தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் செய்த சாதனைகள் மகத்தானவை என சூளுரைத்தார்.  முந்தைய அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்து விட்டதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் சாடினார்.