திருத்தணி கோவிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம்... இந்து அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்...

திருத்தணி கோவிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று இந்து அறநிலயத்துறை அமைச்சர் சேகர்பாபு  தெரிவித்துள்ளார்.

திருத்தணி கோவிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம்... இந்து அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்...
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக இந்து அறநிலை துறை ஆணையர் குமரகுருபரன், ஆகியோர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் ராஜகோபுர பணி, சாலை பணி, திருக்கோயில் தங்கும் விடுதிகள், என பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.  ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர் சேகர்பாபுவுக்கு திருக்கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது. திருத்தணி முருகன் கோயிலில் மூலவர் முருகப் பெருமானை தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது,
 
மலைக்கோயிலில் உள்ள கல்ஹாரி தீர்த்தம் சுத்தமாக வைத்துக்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த குளத்தில் பூக்கும் அபூர்வமான வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் இந்த மலரை காட்சிப்பொருளாக பக்தர்களுக்கு பார்வைக்கு வைப்பதற்கு திருக்கோயிலின் தலைமை அர்ச்சகர் சுதாகரிடம் கூறப்பட்டுள்ளது.  மலைக்கோயில் அடிவாரத்தில் இருந்து படிக்கட்டு வழியாக முருகன் கோயிலுக்கு வரும் வழியில் இரண்டு மண்டபங்கள் உள்ளது இது சிதிலமடைந்து உள்ளது ஒரு மண்டபத்தை முற்றிலுமாக அகற்றுவதற்கு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

 
மலைக் கோவிலில் நடைபெற்றுவரும் ராஜகோபுர பணி முடியும் தருவாயில் உள்ளது இந்த பணியினை படிக்கட்டுகள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது ஆகமவிதிப்படி 365 படிக்கட்டுகள் அமைக்கும் பணி முடித்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.  தங்க கோபுர பகுதியில் மழை தண்ணீர் தேங்கி முருகன் கோயில் மூலவர் சன்னதியில் வருவதால் மழை தண்ணீர் வரும் பகுதியினை உடனடியாக சரி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு தற்போது உள்ள நிலையில் தளர்வுகள் இல்லாத 11 மாவட்டங்களில் திருக்கோயில்கள் திறக்கப்படவில்லை. இந்த திருக்கோவில்கள் முதலமைச்சரின் ஆய்வுக்கு பின்பு தமிழக முதலமைச்சர் கோயில்கள் திறப்பது குறித்து முறைப்படி அறிவிப்பார். திருத்தணி முருகன் கோயில் மலைக் கோயிலுக்கு பின்புறம் மாற்று மலைப்பாதை வாகனங்கள் செல்ல திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இதை உடனடியாக சாலை அமைக்கும் பணிக்கு விரைந்து முடிக்க இந்து அறநிலைத் துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கும் நேரில் அழைத்துச் சென்று மலைக்கோயில் பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
 
திருத்தணி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வயதானவர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்கள் வருகிறார்கள். அவர்களின் நலனுக்காக தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவித்தபடி இந்த கோயிலுக்கு ரோப் கார் வசதி செய்து கொடுக்கப்படும்.  தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை செய்யும் அதிகாரிகள் இடையூறின்றி அவர்கள் பணி செய்கிறார்கள் இதில் குற்றச்சாட்டில் உள்ள அறநிலை துறை சார்ந்த அதிகாரிகள் யாராக இருந்தாலும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு இந்த அரசு தக்க தண்டனையை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுத் தரப்படும்.  திருத்தணி முருகன் கோயில் சரவண பொய்கை திருக்குளம் பக்தர்கள் நலனுக்காக சீர்செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு மக்களுக்கு கொண்டு வரப்படும். திருத்தணி முருகன் கோயில் சொந்தமான தங்கும் விடுதிகள் அனைத்தும் பக்தர்களின் நலனுக்காக மறுசீரமைப்பு அனைத்து வேலைகளும் துரிதகதியில் செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
 
திருத்தணி முருகன் கோயிலில் போலிச் சான்றிதழ்கள் மூலம் 37 பணியாளர்கள் பணியில் உள்ளனர் என்ற செய்தியாளர் கேள்விக்கு, இந்த புகாருக்கான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. தவறு நிரூபிக்கும் பட்சத்தில் தக்க தண்டனை பெற்று தரப்படும் என்று தெரிவித்தார் அமைச்சர். மேலும் இதே போல் முருகன் கோயில் தங்க கோபுரத்தில் தங்கம் மாயமான வழக்கில் தமிழக சிலை கடத்தல் பிரிவு வழக்கு விசாரணை உள்ளது என்று என்றும், இந்த வழக்கு குறித்து விரிவான விசாரணை செய்வதற்கு ஆவணம் செய்யப்படும் தவறு செய்த அதிகாரிகள் மீது தக்க தண்டனை பெற்று தரப்படும் என்று தெரிவித்தார் அமைச்சர்.
 
இந்த ஆய்வு நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் மேற்கு திமுக மாவட்ட  பொறுப்பாளர் எம்.பூபதி, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் உள்பட மற்றும் இந்து அறநிலைய துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.