அண்ணாமலைக்கு தைரியம் இருக்கிறதா? என்னிடம் எல்லா ஆதாரமும் உள்ளது - காயத்ரி ரகுராம் சவால்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை பதவியில் இருந்து இறக்க என்னிடம் போதுமான ஆதாரம் உள்ளது எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பாஜகவிலிருந்து அண்மையில் விலகிய காயத்ரி ரகுராம்.
காயத்ரி ரகுராம்:
பாஜகவில் பதவியில் இருந்த காயத்ரி ரகுராம் அண்ணாமலை குறித்தும் கட்சியில் நடக்கும் உட்கட்சி விவகாரங்கள் குறித்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். அதன் காரணமாக பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். தொடர்ச்சியாக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மேலும் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தவர் தொடர்ந்து மீடியாக்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.
பெண்களுக்கு ஆதரவு?:
தற்போது ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு காயத்ரி அளித்துள்ள பேட்டியில், கடந்த 2 மாதங்களாக தமிழ்நாடு பாஜகவில் மட்டும் பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருகின்றன. பெண்களுக்கு அண்ணாமலை எந்த விதத்தில் ஆதரவாக இருக்கிறார் என்ற கேள்வியை அவரிடம் கேட்க விரும்புகிறேன். டெய்சி திருச்சி சூர்யா சிவா இடையே நடந்த ஆடியோ விவகாரத்திலும் அண்ணாமலை சமரசம் செய்து திருச்சி சூர்யாவை கட்சியில் உள்ள பொறுப்பிலிருந்து இடைநீக்கம் செய்தார். அவர் கட்சியில் இருந்து விலகிவிட்டார்.
அலிஷா - சூர்யா:
ஆனாலும் அவரது விலகலை அண்ணாமலை ஏற்கவில்லை. அடிப்படையில் திருச்சி சூர்யா தவறு செய்தவர். அவர் ஒருவருக்கு மட்டும் எதையும் செய்யவில்லை. அலிஷா அப்துல்லாவிடம் ஆபாசமாக பேசியுள்ளார். அதுவும் டெய்சி ஆடியோ லீக்கான அதே மாதத்தில்! அலிஷா செய்தியாளர்களை சந்தித்து திருச்சி சூர்யா மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்ததை பார்த்தோம். ஆனாலும் நடவடிக்கை இல்லை எனக் கூறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: புத்தக கண்காட்சியில் அரங்கு எண் 28 - அலை மோதிய மக்கள் கூட்டம்..!
தவறான அர்த்தத்தில்..:
கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சுமார் 150 பேர் முன்பு அண்ணாமலை என்னை பற்றி மிகவும் அவதூறாக பேசியுள்ளார். துபாய் ஹோட்டலில் நான் திமுக பிரமுகருடன் இருந்ததாக தவறான அர்த்தத்தில் பேசியுள்ளார். அங்கு நடந்ததை சொன்னால் அசிங்கமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். ஆதாரமே இல்லாமல் ஒரு பெண்ணை எப்படி மோசமாக பேச முடியும்?
அண்ணாமலை தோல்வி:
அண்ணாமலையை பதவியிலிருந்து இறக்க என்னிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. நான் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிக்காமல் தான் பிரபலமடைகிறேன் என எந்த தலைவராவது சொல்வார்களா? பாஜகவில் சமஉரிமை, சமத்துவம் இல்லை. அண்ணாமலை பாஜகவில் உள்ள பெண்களிடம் தோல்வியடைந்துள்ளார் எனப் பேசியுள்ளார்.
தைரியம் இருக்கிறதா?
மேலும் நேற்று காயத்ரி வெளியிட்ட ட்விட்டர் பதிவில். அண்ணாமலையிடம் நான் நேர்காணல் நடத்த வேண்டும். அவர் என்னை சந்திக்க தைரியம் இருக்கிறதா என கேட்டுள்ளார். மேலும், சென்னையில் நடந்த ஒரு பிறந்த நாள் விழாவில் திமுக பிரமுகர் வந்தார். அவர் எல்லா விஐபிகளையும் போல் வந்துள்ளார். என்னிடம் வந்து நலம் விசாரித்தார். நான் நாகரீகம் கருதி அவரை நலம் விசாரித்தேன். திமுகவை சேர்ந்தவர் என்பதால் அவரை கத்தியால் நான் குத்தி விட முடியுமா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.