வேற சாதியில் திருமணம் செய்தேன் - என்னிடம் கோவில்வரி வாங்க மறுக்கிறது - தர்ணாவில் ஈடுபட்ட பெண்!!!!

வேற சாதியில் திருமணம் செய்தேன் - என்னிடம் கோவில்வரி வாங்க மறுக்கிறது - தர்ணாவில் ஈடுபட்ட பெண்!!!!

வேறு சமூகத்தில் திருமணம் 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மாவூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சுணன் என்பவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த பெத்தி என்பவரும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கலப்புத் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பெத்தியின கணவர் அவரை விட்டுப் பிரிந்து சென்று வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பெத்தி அவரது 4 பிள்ளைகளுடன் மாவூர் கிராமத்தில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் மாவூர் கிராமத்தில் பெத்தியின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் வழிபட்டு வந்த பெருமாள் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து கோவில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் அக்கோவிலுக்கு விரைவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. 

திருவாடானை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா

அந்தக் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பெத்தியின் சமூகத்தினர், மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவரை பெத்தி திருமணம் செய்ததால் அவரிடம் கோவில் வரி வாங்கவில்லையென கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பெத்தி, அவரது சமூகத்தினர் ஏற்பாடு செய்துள்ள பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தன்னிடம் வரி வாங்கவில்லை எனவும், இது குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் திருவாடானை வட்டாட்சியர் ஆகியோருக்கு புகார் மனு அளித்துள்ளார். ஆனால் அந்த புகார் மனுக்கள் அனுப்பி பல மாதங்களாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென கூறப்படுகிறது.இந்த நிலையில் பெத்தி இன்று திருவாடானை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் படிக்க | பரீட்சை எழுதியது 16 பேர் - பாஸ் ஆனது 8 பேர் - பெற்றோர்கள் அதிர்ச்சி

சமரச பேச்சுவார்த்தை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாடானை இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு திருவாடானை தாலுகா அலுவலகத்திற்கு வந்த வட்டாட்சியர் கார்த்திக்கேயன் அவரது தலைமையில் தர்ணாவில் ஈடுபட்ட பெண் பெத்தி மற்றும் கோவில் கும்பாபிஷேக விழா நடத்த உள்ள அவரது சமூகத்தினரை அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.அந்த பேச்சுவார்த்தையின் போது சம்பந்தப்பட்ட பெருமாள் கோவில் அமைந்துள்ள இடத்தை நில அளவீடு செய்த பிறகு கோவில் அமைந்துள்ள இடம் தனிநபர் பட்டா இடமா? அல்லது அரசு புறம்போக்கு இடமா? என்பதை உறுதி படுத்திய பின்புதான் ஒரு முடிவு எடுக்க வாய்ப்புள்ளது எனவும்,  அதுவரை தற்சமயம் மனுதாரர் பெத்தியிடம் நன்கொடை வசூல் செய்து அவரது குடும்பத்தினர் சாமி கும்பிடுவதற்கு எவ்வித இடையூறும் தெரிவிக்க கூடாது எனவும் இரு தரப்பினரிடமும் கூறினார்