கலப்புத் திருமணம் செய்த இளம்பெண்... பெற்றோரே ஏமாற்றி கடத்திய சம்பவம்...

திருச்சியில் கலப்பு திருமணம் செய்த இளம் பெண்ணை ஏமாற்றி கடத்தி வந்த பெற்றோரிடமிருந்து இளம்பெண்ணை போலீசார் மீட்டனர். 

கலப்புத் திருமணம் செய்த இளம்பெண்... பெற்றோரே ஏமாற்றி கடத்திய சம்பவம்...

திசையன்விளை அருகே உள்ள மேட்டுவிளையை சேர்ந்தவர் காசி மகள் மயில் (21). இவர் நெல்லையை தலைமையிடமாகக் கொண்ட கொண்டு திருச்சியில் செயல்படும் (போத்தீஸ்) ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அதே கடையில் திருச்சியை அடுத்துள்ள சமயபுரத்தைச் சேர்ந்த அருண்பாண்டி(25) என்பவரும் வேலை செய்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து உள்ளனர்.  இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் திருமணத்திற்கு பின்பு ஜவுளி கடையிலிருந்து வெளியேறிய இருவரும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளனர்.  இதனை தொடர்ந்து காசி தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் திருச்சிக்கு சென்று அங்கிருந்த மகளைச் சந்தித்து பேசியுள்ளனர். இதனால் சமாதானம் அடைந்த மயில் பெற்றோருடன் திருச்சியில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது மயிலுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதாகவும் அதனை கழிப்பதற்காக ஒரு சாமியாரிடம் செல்வதாகவும் கூறி மயிலை வாடகை காரில் பெற்றோர் அழைத்து வந்துள்ளனர்.

நீண்ட நேரத்திற்கு பின்னர் கார் நெல்லைக்கு வந்ததும் சந்தேகமடைந்த மயில் பெற்றோரிடம்  விபரம் கேட்டு உள்ளார். அதற்கு மழுப்பலாக அவர்கள் பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த மயில் தனது விருப்பமில்லாமல் கணவருக்கும் தெரியாமல் தன்னை பெற்றோர் அழைத்து வருவதை உணர்ந்து மயில் பதற்றம் அடைந்து உள்ளார். 
இருப்பினும் நான்குநேரி வரும்வரைக்கும் மயில் சாதுரியமாக அமைதி காத்து வந்துள்ளார். நாங்குநேரி ரயில்வே கேட் அருகே நேற்று மாலை நான்குநேரி எஸ். ஐ., முனியசாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது மயில்  குடும்பத்தினருடன் வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது காருக்குள் இருந்த மயில் என்னை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார். இதனால் பதற்றம் அடைந்த போலீசார் அனைவரையும் காரைவிட்டு இறக்கி விசாரணை நடத்தினர். அதில் தன்னை தனது கணவருக்குத் தெரியாமல் பெற்றோர் கடத்தி வந்து விட்டதாகவும் அவர்களுடன் செல்ல அச்சமாக இருப்பதாகவும் மயில் போலீசாரிடம் தெரிவித்தார். இதனை அடுத்து எஸ். ஐ., முனியசாமி  மற்றும் போலீசார் மயிலை மீட்டு நான்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். மேலும் திருச்சியில் உள்ள அவரது கணவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வந்த பின்னரே அவரிடம் மயிலின் விருப்பப்படி ஒப்படைக்கப்படுவார் எனவும் போலீசார் தெரிவித்தனர். 

மேலும் மகளை கடத்தி வந்த பெற்றோரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். வேறு ஜாதி பெண்ணைக் கலப்பு திருமணம் செய்த பெண்ணைப் பெற்றோரே கடத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . தக்க சமயத்தில் இளம் பெண்ணுக்கு உதவிய நான்குநேரி போலீசாரை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.