அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு... புதிய அறிவிப்புகள் வெளியிட்டார் முதலமைச்சர்... 

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாகவே, அடுத்தாண்டு ஜனவரியில் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு... புதிய அறிவிப்புகள் வெளியிட்டார் முதலமைச்சர்... 

சென்னை கலைவாணர் அரங்கில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 110 விதியின் கீழ் 13 திட்டங்களை அறிவித்தார். 

அதன்படி, ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 3 மாதங்களுக்கு முன்னதாகவே ஜனவரி 1ஆம் தேதி முதல் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார். இதன் மூலமாக 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவர் என்றும், ஆண்டுக்கு 6 ஆயிரத்து 480 கோடி ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்தார். 

சத்துணவு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58-லிருந்து 60 ஆக உயர்த்தப்படுவதாக அறிவித்த முதலமைச்சர் இதன்மூலம், தற்போது பணியிலிருக்கும் 24 ஆயிரத்து 576 பேர் பயனடைவர் எனத் தெரிவித்தார்.

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும், அரசுப் பணியாளர்களுக்கு உயர் கல்வித் தகுதிகளுக்கான ஊக்கத்தொகை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். 

அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படும் முறை தவிர்க்கப்படும் என அறிவித்த முதலமைச்சர், பணியில் இருக்கும்போது உயிரிழக்கும் அரசுப்பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவதில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் வகையில், வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும் என்றும், 

முந்தைய அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காலம் மற்றும் தற்காலிக பணியிடை நீக்க காலம் ஆகியவை பணி காலமாக முறை படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

அதேபோல், வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை அதே இடத்தில் மீண்டும் பணி அமர்த்தும் வகையில், கலந்தாய்வின் போது முன்னுரிமை வழங்கப்படும் எனவும், 

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால், ஆசிரியர் - மாணவர் விகிதாச்சார தேவைக்கேற்ப ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.