லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பு... ஆவின் பால் விற்பனை அதிகரிப்பு...

ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கபட்டதன் எதிரொலியாக, கடந்த இரண்டு மாதங்களில் 1 லட்சத்து 68 ஆயிரம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளது.

லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பு... ஆவின் பால் விற்பனை அதிகரிப்பு...
திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் ஆவின் பாலின் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்ற ஆணையில் கையெழுத்திட்டார். அதன்படி லிட்டருக்கு மூன்று ரூபாய் விலை குறைப்பு மே 16ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
 
ஆவின்பால் விலைபட்டியலில் பால் அட்டைதாரர்களுக்கு சமன்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டரின் விலை ரூ. 40லிருந்து ரூ. 37ஆக குறைக்கப்பட்டது. நிலைப்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் ரூ.22.50ல் இருந்து 21 ஆக குறைக்கப்பட்டது.
 
அதேப்போல் சில்லரை விற்பனையில் சமன்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டரின் விலை ரூ. 43லிருந்து ரூ. 40ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் ரூ.23.50ல் இருந்து 22 ஆக குறைக்கப்பட்டது.
 
இதையடுத்து, ஆவின் பால் விற்பனை அடுத்தடுத்து உயர்ந்தது. குறிப்பாக விலை குறைப்புக்கு முன், கடந்த மே மாதத்தில் 24 லட்சத்து 69 ஆயிரம் லிட்டர் விற்பனை என இருந்த சூழலில், ஜூன் மாதத்தில் 26 லட்சத்து 27 ஆயிரம் லிட்டர் என விற்பனை உயர்ந்தது.
 
ஜூலையில் ( இம்மாதம்) 26 லட்சத்து 37 ஆயிரம் லிட்டர் என விற்பனை அதிகரித்துள்ளது.குறிப்பாக கடந்த இரண்டு மாதத்தில் 1 லட்சத்து 68 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் விற்பனை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.