இன்று ஒன்றிய மற்றும் மாவட்ட குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல்

விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான  தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. 

இன்று ஒன்றிய மற்றும் மாவட்ட குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல்

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு, கடந்த  6 மற்றும் 9 ஆம் தேதி இரண்டு கட்டங்களாக  உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள்  அனைவரும் நேற்று முன்தினம்  பதவி ஏற்றுக்கொண்டனர். 

உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்று  கொண்ட நிலையில்  மாவட்ட மற்றும் ஒன்றிய குழுதலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. 9 மாவட்டங்களில் பெருவாரியான உள்ளாட்சி இடங்களை  திமுக கூட்டணி வசப்படுத்தியுள்ளதால் அனைத்து  தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளை கைப்பற்ற  திமுகவினர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில்  மறைமுக தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.    கூட்டம் நடத்துவதற்கு அறிவிக்கப்பட்ட  இடத்தில் மட்டுமே தேர்தலை நடத்த வேண்டும் எனவும்  வேறு இடத்தில் நடத்தினால் அது செல்லாது என அதில் கூறப்பட்டுள்ளது. கூட்டம் தொடங்கிய உடன், வருகை புரிந்துள்ள உறுப்பினர்களின் பெயர்களை பதிவு செய்து கையெழுத்து பெற வேண்டும் என கூறியுள்ள தேர்தல் ஆணையம், பெரும்பான்மைக்கும் குறைவான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வந்திருப்பின் தேர்தல் நடத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

கிராம ஊராட்சி தலைவர் யாருக்கும் முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. துணைத்தலைவர் தேர்தலில் போட்டியில்லாவிட்டால், வேட்பாளரை வெற்றி பெற்றவராக அறிவித்து அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும் எனவும். ஒரு பதவிக்கு இரண்டு பேர் போட்டியிட்டு சம வாக்குகளைப் பெற்றால் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட 14 வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.