சட்டப்பேரவையில் 22 மசோதாக்கள் அறிமுகம்.. குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்.. பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!!

சட்டப்பேரவையில் இன்று 20 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து  பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

சட்டப்பேரவையில் 22 மசோதாக்கள் அறிமுகம்.. குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்.. பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் 6 முதல் இன்று வரை 22 நாட்கள் நடைபெற்றது.

இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா, சொத்துவரி உயர்வை உள்ளாட்சி அமைப்புகள் நடைமுறைப்படுத்த வகையும் செய்யும்  மசோதா, விதிமுறைகளை மீறும் கிராம ஊராட்சி செயலாளர்கள் மீது நடவடிக்கை வகை செய்யும் மசோதா மற்றும் சித்த மருத்துவ பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரை நியமிக்கும் மசோதா, வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தரை அரசே நியமிக்கும் மசோதா, சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரை அரசே நியமிக்கும் மசோதா உள்ளிட்ட 22 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதாவும், சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவும் ஏற்கனவே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சூழலில், ஏனைய 20 மசோதாக்கள் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இன்று நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களும் ஓரிரு நாட்களில் சட்டத்துறை வாயிலாக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்  நிறைவடைந்தததை அடுத்து சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.