ஆசிரியர் தேர்வு வாரியம் உறங்குகிறதா? அன்புமணி கேள்வி!

ஆசிரியர் தேர்வு வாரியம் உறங்குகிறதா? அன்புமணி கேள்வி!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற அமைப்பு செயல்படுகிறதா அல்லது உறங்குகிறதா? என தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி  எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக தமிழ்நாட்டில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பணியாற்ற தேவையான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் 2012-ஆம் ஆண்டிற்கு பிறகு அரசு கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், 2013-14ஆம் ஆண்டுக்குப் பிறகு இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும்  தேர்ந்தெடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அரசு பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பதை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 
அவ்வறிக்கையில், தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணிக்காக லட்சக்கணக்கான  தேர்வர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், நடப்பாண்டில் 5 மாதங்கள் நிறைவடைந்தும் இதுவரை  ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான எந்த அறிவிக்கையும் வெளியாகவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் 2023-ஆம் ஆண்டில் மொத்தம் 8 வகையான பணிகளுக்கு 15,149 பேரை தேர்ந்தெடுக்க திட்டமிட்டிருந்ததாகவும் அவர்களில் 5 வகையான பணிகளுக்கு 14,656 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கைகள் மே மாதத்திற்குள்ளாக வெளியிடப்பட்டு இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற அமைப்பு செயல்படுகிறதா அல்லது உறங்குகிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், கோடை விடுமுறை முடிவடைந்து ஒரு வாரத்திற்குள் அரசு பள்ளிகள் திறக்கப்படவிருக்கும் நிலையில், அதற்கு முன்பாக புதிய ஆசிரியர்களை அமர்த்தியிருக்க வேண்டும். ஆனால், அதற்கான ஏற்பாடுகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை என்றால் நடப்பாண்டும் பற்றாக்குறை ஆசிரியர்களுடன்  தான் அரசு பள்ளிகளும், கல்லூரிகளும் செயல்பட வேண்டும். அப்படியானால் கல்வித்தரம் எவ்வாறு உயரும்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த அடிப்படையை உணர்ந்து அரசு பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க:"83 மதிப்பெண்ணுக்கும் 84 மதிப்பெண்ணுக்கும் ஒரு நூற்றாண்டு வித்தியாசம்" விளக்கமளித்த இளம் பெண்..! வாழ்த்திய முதலமைச்சர்..!!