சாயக் கழிவுநீரால் பொதுமக்கள் ஊரை விட்டு காலி செய்யும் அவலம்

கரூர் அருகே தொடரும் சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுநீரால் பொதுமக்கள் ஊரை விட்டு காலி செய்யும் அவலம் நீடித்து  வருகிறது. தீராத வயிற்றுவலி உள்ளிட்ட வியாதிகள் பரவும் அபாயம் இருந்தும் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  

சாயக் கழிவுநீரால் பொதுமக்கள் ஊரை விட்டு காலி செய்யும் அவலம்

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், தாளப்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட செய்யப்ப கவுண்டன்புதூர் பகுதியில் 5 சாயப்பட்டறைகள் இயங்குகிறது. இந்த ஆலைகளில் இருந்து   சுத்திகரிக்கப்படாமல், சாயக்கழிவு நீரினை அப்படியே நிலத்திற்குள்ளும், அமராவதி ஆற்றுக்குள்ளும் திறந்துவிடுவதினால் அருகிலுள்ள செங்காளிப்பாளையம், கொடையூர், ராகுபுரம், தாளப்பட்டி உள்ளிட்ட  5க்கும் மேற்பட்ட கிராம மக்கள்  கடும் பாதிப்புக்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது. 

மேலும் கடந்த சில மாதங்களாகவே, போரிலிருந்து வெளிவரும் குடிநீர் தினம் தினம் ஒரு நிறத்தில் வருவதாகவும்,  முழுவதும் உப்புநீராக வருவதாக புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை என மாவட்டகிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த தண்ணீரை குடித்து தீராத வயிற்று வலி,  கைக் கால் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கு ஆளாகி வருவதுடன் கால்நடைகளும் தொடர்ந்து பலியாகி வருவதாக  வேதனை தெரிவிக்கின்றனர் . கிராம மக்கள். 

சுத்திக்கரிக்கப்படாமல் சாயக்கழிவுநீரினை ஆற்றில் கலந்து விடுவதினால் நிலத்தடி நீர் 
பாதிக்கப்பட்டுள்ளதுடன் விவசாய நிலமும் விளைச்சல் இல்லாமல் அழிந்து வருவதாக கண்ணீர் வடிக்கின்றனர் விவசாயிகள்.

எனவே சுத்திகரிக்கப்படாமல்  சாயக்கழிவு நீரை வெளியேற்றும் சாயப்பட்டறைகளுக்கு சீல் வைத்து ஆயிரக்கணக்கான மக்களின் உயிரையும் விவசாய நிலத்தையும் காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட  கிராம மக்கள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.