கரூர் : மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து...!

கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தீ விபத்து - சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்

கரூர் : மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து...!

கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு, வாங்கல் சாலையில் அரசு காலணி அருகில் உள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சேகரிக்கப்படும் டண் கணக்கான குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரங்கள் தயாரிக்க அனுப்பப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே சேகரிக்கப்பட்ட குப்பைகள் இங்கு மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. 

அப்பகுதியில் சுற்றித் திரியும் மர்ம நபர்கள் அவ்வப்போது, அதில் தீ வைத்துச் சென்று விடுவர், அவற்றை மாநகராட்சி அதிகாரிகள், தீயணைப்பு துறையினர் உதவியுடன் அணைப்பது வழக்கம். இந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் தீ பிடித்துள்ளது. இதனை அறிந்த மாநகராட்சி ஊழியர்களும், அதிகாரிகளுக்கும், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கரூர், புகழூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மாநகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் லாரிகளில் தண்ணீர் எடுத்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் இன்று காலை முதல் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை மாநகராட்சி மேயர் கவிதா, ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வையில் இப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கரூர் - வாங்கல் சாலையில் போக்குவரத்தை மாற்றுப் பாதையில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த குப்பை கிடங்கை சுற்றி 5 கி.மீ சுற்றளவில் உள்ள கிராமங்கள் இந்த புகையினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.