கரூர் : புத்தகத் திருவிழாவுக்கான அடையாள சின்னம் வெளியீடு..!

கரூர் மாவட்டத்தில் புத்தகத் திருவிழாவுக்கான அடையாள சின்னம் வெளியீடு செய்யப்பட்டது.

கரூர் : புத்தகத் திருவிழாவுக்கான அடையாள சின்னம் வெளியீடு..!

கரூர் மாவட்டத்தில் வருகிற 19-ம் தேதி 100 அரங்குடன் கூடிய மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், கரூர் புத்தகத் திருவிழாவின் அடையாளச் சின்னத்தை வெளியிட்டார். சின்னமாக, நூலன்- நூலி என்ற பெயரில், கரூர் மாவட்டத்தில் கடவூர் காடுகளில் அதிக அளவு வசிக்கும் தேவாங்கு விலங்கினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் அதனை பாதுகாக்க கடவூரில் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதை கௌரவிக்கும் விதமாக புத்தக திருவிழாவின் அடையாள சின்னமாக தேவாங்கு உருவப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த புத்தக திருவிழாவில் 100 புத்தக அரங்குகள் ,தொல்லியல் அருங்காட்சியகம், கோளரங்கம், குறும்பட திரையரங்கம், உணவகங்கள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் கூடிய அரங்குகள் இடம் பெற உள்ளன. 

இந்த புத்தகத் திருவிழாவிற்கு தினந்தோறும் 4000க்கும் மேற்பட்ட பள்ளி  மற்றும் கல்லூரி மாணவர்கள் வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விழாவில், மாலை 4 மணி முதல் 6 மணி வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் மற்றும் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. அதைத் தொடர்ந்து சிந்தனை நிகழ்ச்சிகளும் இடம் பெற உள்ளன என ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.