கரூரில் நடந்தது ஜனநாயக படுகொலை...குற்றம் சாட்டும் ஜெயக்குமார்...!

கரூரில் நடந்தது ஜனநாயக படுகொலை...குற்றம் சாட்டும் ஜெயக்குமார்...!

கரூரில் அதிமுக உறுப்பினர் கடத்தப்பட்டது ஜனநாயக படுகொலை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்

சிறுபான்மையினரின் பாதுகாப்பு அரண்:

சென்னை வானகரத்தில் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக திகழ்கிறது என்று தெரிவித்த அவர், திமுகவை போல் உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றும் இல்லாமல் முழுமையான பாதுகாப்பு அரணாக தான் நாங்கள் இருந்து வருகிறோம் என்று விமர்சித்தார்.

திமுக ஆட்சியில் எப்போதும் ஜாதி சண்டை தான்:

தொடர்ந்து பேசிய அவர், எங்கள் ஆட்சியில் எந்தவித ஜாதி மத மோதல்களும் இல்லாமல் ஒற்றுமை உணர்வோடு வாழக்கூடிய ஒரு சூழ்நிலையையும், பாதுகாப்பையும் அதிமுக நல்கியது, ஆனால், திமுக ஆட்சியில் ஜாதி சண்டை என்பது நீடித்து வருவதாக குறிப்பிட்டார்.

அவர்களின் ஆதரவு எங்களுக்கே:

இதனால் சிறுபான்மை மக்கள் மீண்டும் அதிமுக ஆட்சி தான் மலர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், இதன்காரணமாக வருகிற நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு தான் அவர்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று கூறினார்.

இதையும் படிக்க: வரும் 23, 24 ம் தேதிகளில்... தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை...!இந்திய வானிலை மையம் சொல்வது என்ன?

ஜனநாயக படுகொலை:

இதைத்தொடர்ந்து, கரூரில் அதிமுக உறுப்பினர் கடத்தப்பட்டது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயல் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, நடைபெற்ற கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் தேர்தலின் போது இவ்வாறு நடந்துள்ள சம்பவத்துக்கு காவல்துறை அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.

கடத்தப்பட்ட அதிமுக உறுப்பினர்: 

முன்னதாக, டிசம்பர் 19 ஆம் தேதியான நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, கரூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட அதிமுக உறுப்பினர் திருவிக, ஓட்டு போடுவதற்காக காரில் சென்ற போது, காரில் வந்த மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைத்து கடத்தி சென்றுள்ளனர். பின்னர் சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு, கல்வார்பட்டி சோதனைச் சாவடியில் மீட்கப்பட்டார்.

கை, கால்களில் அடித்தனர்:

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த திருவிக, தன்னை 7 பேர் கொண்ட கும்பல் கடத்தியதாகவும், 3 மணி நேரம் நத்தம் காட்டுப் பகுதிக்குள் வைத்து சுற்றி சுற்றி வந்ததாகவும், மேலும் தன்னை துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கூறி கை, கால்களில் அடித்ததாகவும் திருவிக கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான், கரூரில் அதிமுக உறுப்பினர் கடத்தப்பட்டது ஜனநாயக படுகொலை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.