‘நித்தி’யின் உடல்நிலை மோசமடைந்ததா? : சிகிச்சைக்கு அனுமதி கோரி இலங்கை அதிபருக்கு கடிதம் !!

சிகிச்சை பெற இலங்கைக்கு வர அனுமதிக்கும்படி அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிடம் நித்தியானந்தா கேட்டிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

‘நித்தி’யின் உடல்நிலை மோசமடைந்ததா? : சிகிச்சைக்கு அனுமதி கோரி இலங்கை அதிபருக்கு கடிதம் !!

தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண் பக்தையை பாலியல் சித்ரவதை செய்ததாக எழுந்த புகார் மூலம் மக்கள் மத்திய அறியப்பட்டவர் நித்யானந்தா. இவர் மீது இயற்கைக்கு முரணான உறவு உள்பட பல்வேறு மோசடி வழக்குகளும் உள்ளன. இவர் ஜாமினில் வெளிவர முடியாத கைது வாரண்ட் உத்தரவை கர்நாடகா செசன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்ததை அடுத்து தலைமறைவான நித்தியானந்தா,  ஸ்ரீ கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அதன் அதிபராக இருப்பதாக வீடியோ வௌியிட்டார்.

இதனிடையே அவர் தியானத்தில் ஆழ்ந்திருப்பதாக அண்மையில் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் இறந்திருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்த  நிலையில், நித்தியானந்தா தியான நிலையில் இருப்பதாக அவரது ஆசிரமம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவரது உடல் நலம் மிகவும் மோசடைந்து வருவதாகவும், அவருக்கு உடனடி சிகிச்சை அளிக்க உதவ வேண்டும் எனக் கூறி நித்தியானந்தா தரப்பில் இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அதில் கைலாசாவில் அளித்த சிகிச்சை மூலம் அவரது நோயை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், ஏர் ஆம்புலன்ஸ் மூலம் நித்தியானந்தாவை இலங்கை அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால், பாதுகாப்பை உறுதி செய்து மருத்துவம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.