கள்ளச்சாராயம், உயிரிழந்தோர் எண்ணிக்கை 7-ஆக உயர்வு..!

கள்ளச்சாராயம், உயிரிழந்தோர் எண்ணிக்கை 7-ஆக உயர்வு..!

மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்து எக்கியார் குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதில், வாந்தி மயக்கம் ஏற்பட்டு 15-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 3 பேர் கவலைக் கிடமான நிலையில் மருத்துவனையின் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.

இந்த விவகாரத்தில மரக்காணம் மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்த பிரபல சாராய வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், கள்ளச்சாராய வியாபாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரி, அப்பகுதி மக்கள் சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களை சந்தித்த மாவட்ட அட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சம்பந்தப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும்  உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் நிதியுதவி  வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே வடக்கு மண்டல ஐஜி கண்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வைத்து செய்தியாளா்களை சந்தித்து பேசுகையில், டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபானங்கள் அருந்தியதால் உயிாிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தொிவித்தாா். தொடா்ந்து பேசிய அவா், 10 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து, மாவட்டம் முழுவதும் தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டு வருகிறது எனவும் கூறினாா். மேலும் அவா் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்காத மேல்மருவத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் உள்பட 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்றாா். 

இதையும் படிக்க:"தாயை விட பெரிய சக்தி எதுவுமே இல்ல" டாஸ்மாக்கை சூறையாடிய தாய்மார்கள்...!!