உள்ளாட்சி அமைப்பு தனி அலுவலர் பதவிக்கால நீட்டிப்பு மசோதா... தமிழக சட்டப்பேரவையில் தாக்கல்...

உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு மசோதா சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

உள்ளாட்சி அமைப்பு தனி அலுவலர் பதவிக்கால நீட்டிப்பு மசோதா... தமிழக சட்டப்பேரவையில் தாக்கல்...
சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான இன்று தேர்தல் நடத்தப்படாத உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பது தொடர்பான சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது.
 
16 சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கடந்த திங்களன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த சிறப்பு குழு, கொரோனா மூன்றாவது அலையைத் தடுக்க நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றன.
 
இதைத் தொடர்ந்து நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மூன்றாம் நாளான இன்று தேர்தல் நடத்தப்படாத உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது.
 
மேலும் இன்றைய கூட்டத்தில் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சி மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகளுக்கான 2ம் திருத்த சட்டமுன் வடிவை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் தாக்கல் செய்தனர்.
 
இன்றைய கூட்டத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா, நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன்  உள்ளிட்டோர் உரையாற்றவுள்ளனர்.இதனால் இன்று சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.