14 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் தீப்பெட்டி விலை... எவ்வளவு தெரியுமா?

மூலப்பொருட்களின் விலை உயர்வால், சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற டிசம்பர் 1ம் தேதி முதல்,  தீப்பெட்டியின் விலை  2 ரூபாயாக உயர்த்தப்படவுள்ளது.

14 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் தீப்பெட்டி விலை... எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில், கோவில்பட்டி, சங்கரன் கோவில், திருவேங்கடம், விருதுநகர், சிவகாசி, குடியாத்தம், காவேரிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. சுமார்  2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்த தீப்பெட்டி உற்பத்தி ஆலைகளில்  6 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். அவர்களில்  90 சதவீதம் பேர் பெண்கள் எனவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் இந்த தீப்பெட்டிகள், பிற மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

அண்மையில் தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான  பாஸ்பரஸ், குளரேட், மெழுகு, அட்டை, பேப்பர் உள்ளிட்டவற்றின் விலை பலமடங்கு உயர்ந்தது. குறிப்பாக ஒரு கிலோ பாஸ்பரஸ் 410லிருந்து 850 ரூபாயாகவும், மெழுகு ஒரு கிலோ 62 லிருந்து  85 ரூபாயாகாவும், குளரேட் 82 ரூபாயாகவும் உயர்ந்தது. இதுதவிர பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்து வருவதால், தற்போது தீப்பெட்டி உற்பத்திக்கான செலவீனம் அதிகரித்துள்ளது என உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இதனால்  ஒரு ரூபாய்க்கு தீப்பெட்டி விற்பனை செய்தால், நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். 

மூலப்பொருட்களில் விலை உயர்வை சுட்டிக்காட்டி கடந்த 2007ம் ஆண்டு, 50 காசுக்கு விற்கப்பட்ட ஒரு தீப்பட்டியின் விலை ஒரு ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது ஒரு தீப்பெட்டி விலையை 2 ரூபாயாக உயர்த்த  தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தீப்பெட்டி சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளின் முடிவு செய்துள்ளனர். இந்த விலை உயர்வு நடைமுறையானது வருகிற டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.