மே தினம் - சிறப்பு கிராம சபை கூட்டம்...!

மே தினம் - சிறப்பு கிராம சபை கூட்டம்...!

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சி பகுதிகளில் மே முதல் நாளான இன்று சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, மே தினமான இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சி பகுதிகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 6-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்றனர். 

இதையும் படிக்க : 12 மணி நேரம் வேலை: முதலமைச்சருக்கு நன்றி சொன்ன வைகோ...!

அதேபோல், கோவை மாவட்டம் ஜடையம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், பொதுமக்களின் குறைகளை கேட்காமல் அலட்சியமாக நடந்து கொண்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளரை பணி இட மாற்றம் செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதேபோன்று, தென்காசி மாவட்டம் பட்டாடை கட்டி பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், பல்வேறு ஊழல்கள் நடைபெற்று வருவதையும், உறுப்பினர்களுக்கு கிராமசபை கூட்டத்திற்கு முறையாக அழைப்பு விடுக்காததையும் கண்டித்து, உறுப்பினர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருச்சி மாவட்டம் மதுராபுரி ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம கூட்டத்தில், நரிக்குறவர்களுக்கு தனி மயானம் வேண்டி கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், துறையூரை மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தது.