2017 -ல் நடந்தது...இனி எப்போதும் நடக்கக் கூடாது..!

2017 -ல் நடந்தது...இனி எப்போதும் நடக்கக் கூடாது..!

மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ஆதரவாக நகர்ப்புற வளர்ச்சித் துறையும், ஊரக வளர்ச்சித் துறையும் செயல்பட்டு வருவதாக அமைச்சர் கே என் நேரு கூறியுள்ளார்.

கலந்தாய்வு கூட்டம்:

தமிழ்நாடு அளவிலான மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு தடுப்பு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அலுவலர்களுக்கு மழைக்கால நோய்கள் , டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களை தடுப்பது குறித்தான அறிவுரைகள் வழங்கப்பட்டன. 

அமைச்சர் பெரியகருப்பன்:

கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், அனைவரும் ஒன்றிணைந்தால் தொற்று நோய்களைத் தடுக்க முடியும் என்பதை கொரோனா காலகட்டம் உணர்த்தியுள்ளதாகவும், அதேபோன்று மழைக்கால நோய்களையும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் கே என் நேரு:

கூட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பனை தொடர்ந்து பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என் நேரு, மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ஆதரவாக நகர்ப்புற வளர்ச்சித் துறையும், ஊரக வளர்ச்சித் துறையும் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். 

அமைச்சர் மா.சுப்பிரமணியன் உரை:

கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், 2017 ஆம் ஆண்டில் தான் டெங்கு , மலேரியா, டைஃபாய்டு உள்ளிட்ட மழைக்கால நோய்களால் மக்கள் அதிகம்  பாதிக்கப்பட்டதாகவும், அதில் 65 பேர் உயிரிழந்ததாகவும் கூறினார். 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட டெங்கு பாதிப்பைப் போன்று இனி எப்போதும் ஏற்படக்கூடாது என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களை மக்கள் நினைத்தால் 100 சதவீதம் தடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.