அண்ணாமலையின் கேள்விக்கு பதிலளித்த பாலகிருஷ்ணன்...என்ன சொன்னார்?

அண்ணாமலையின் கேள்விக்கு பதிலளித்த பாலகிருஷ்ணன்...என்ன சொன்னார்?

கோவை உக்கடம் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

கார் வெடி விபத்து:

கோவை மாவட்டம் உக்கடம் கோட்டைமேடு பகுதியில், காருக்குள் சிலிண்டர் வெடித்து சிதறியதில் அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. விபத்தில் உயிரிழந்த ஜமேஷா முபின் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளது.

அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு:

இதனிடையே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவை உக்கடத்தில் நடைபெற்றது தீவிரவாதிகளின் தற்கொலைப்படைத் தாக்குதல் என்று பகீர் தகவலை வெளியிட்டார்.  இச்சம்பவத்தில் தொடர்புடைய ஜமேஷா முபின் இறப்பதற்கு முன் தனது செல்போனில் வைத்திருந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பாணியில் உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். முபினின் வீட்டில் இருந்து 55 கிலோ அமோனியம் நைட்ரேட், பொட்டாசியம் போன்ற வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

இதையும் படிக்க: கோவை கார் விபத்து: திமுகவை குற்றம் சாட்டிய அண்ணாமலை...கடிதம் எழுதிய தமிழக பாஜக!யாருக்கு தெரியுமா?

கேள்வி எழுப்பிய அண்ணாமலை :

தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேர் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், எந்தப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தமிழக டிஜிபி கூறாதது ஏன்? எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

தக்க பதிலளித்த பாலகிருஷ்ணன்:

இந்நிலையில், குண்டு வெடிப்பு தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து  கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவை உக்கடம் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.  தொடர்ந்து, கூட்டு சதிக்கான 120 பி, இரண்டு பிரிவினிரிடையே மோதலை உண்டாக்கும் 153 ஏ ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் விளக்கம் அளித்தார். மேலும் 22 பேரிடம் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளதாகவும்  அண்ணாமலையின் கேள்விக்கு பாலகிருஷ்ணன் பதிலளித்தார்.