செய்தியாளர்களை அதட்டிய திமுகவினர்... கண்டித்த அமைச்சர்!

செய்தியாளர்களை அதட்டிய திமுகவினர்... கண்டித்த அமைச்சர்!

இராமநாதபுரத்தில் பத்திரிகையாளரை அதட்டிய திமுகவினரை அமைச்சர் கே.என்.நேரு கண்டித்துள்ளார்.

இராமநாதபுரத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஜல்ஜீவன் திட்டம் மூலமாக ரூபாய் 2,819.78 கோடி மதிப்பீட்டில் 2 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளிட்ட 2,306 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தையும், சாயல்குடி பேரூராட்சியில் ரூபாய் 91.00 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வாரச்சந்தை கட்டிடத் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில், புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு  பேசுகையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஜல்ஜீவன் திட்டத்தின் இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் மேற்கொண்டு பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் முழுமையாக வழங்கப்படும் என்றார்.

அப்போது, கூட்ட அரங்கில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்ட நிலையில் போதிய இருக்கை இல்லாமல் பலர்  நின்று கொண்டிருந்தனர். விழா துவங்கியது முதலே மேடையின் முன் வரிசையில் அமர்ந்திருந்த திமுக நிர்வாகிகள் நிகழ்சியை படம் எடுத்துக் கொண்டிருந்த பத்திரிகையாளரை அதட்டும் தொனியில் ஓரமாக போக சொல்லிக் கொண்டே இருந்தனர். இதனை கவனித்துக் கொண்டிருந்த அமைச்சர் நேரு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பேசிக் கொண்டிருக்கையில் இருக்கையில் இடைமறித்து பேசினார்.

அப்போது, "பத்திரிக்கையாளர்கள் நிகழ்ச்சியை படமாக எடுத்து  தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கையில் வந்தால் தான் மக்களுக்கு அரசு செயல்படுத்தும் நல்ல திட்டங்கள் பற்றி தெரிய வரும். நீங்கள் சிறிய அறையில் விழாவை ஏற்பாடு செய்து விட்டு ஏன் பத்திரிகையாளர்களை ஓரமாக போகச் சொல்கிறார்கள்" என சிரித்தபடியே கடித்துக் கொண்டார். இதற்கு முன் வரிசையில்  இருந்த கட்சி நிர்வாகிகள் வெகுளித்தனமாக சிரித்துக் கொண்டே "நான் இல்லை, நான் இல்லை" எனக் கூறி சமாளித்தனர்.

இதையும் படிக்க:நடுநிலைமை வகிக்குமா செங்கோல்?