கருவறைக்குள் அத்துமீறி நுழைந்த அமைச்சர்களால் பரபரப்பு...

பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் நடப்பதற்கு முன்பே, மூலவர் சிலை அமைந்துள்ள கருவறைக்குள் அத்துமீறி அமைச்சர்கள் நுழைந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருவறைக்குள் அத்துமீறி நுழைந்த அமைச்சர்களால் பரபரப்பு...

திண்டுக்கல் | பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் ஜனவரி 28ம் தேதி நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை நேரில் காண லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், கடந்த ஜனவரி 26ம் தேதி அன்று, மாலை நேரம், பழனி தண்டாயுதபானி மூலவர் சிலை அமைந்துள்ள கருவறைக்குள் ஒரு சிலர் உள்ளே சென்றனர். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

முருகனின் ஆறு படை வீடுகளில் ஒன்றான பழனி கோவில் கும்பாபிஷேகம் குறித்த தேதி அறிவிக்கப்பட்டதும் தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய பல லட்ச பக்தர்கள் வருவார்கள் என்ற நிலையில், மூலவரான நவபாஷண சிலையை பாதுகாக்கும் வகையில், ஒரு குழு அமைக்கப்பட்டது.

மேலும் படிக்க | "புரட்சிகரமான புதிய கல்விக்கொள்கையை அறியாமையால் எதிர்க்கிறார்கள்" - ஆளுநா் ஆா்.என்.ரவி

அந்த குழுவில், ஓய்வு பெற்ற நீதியரசர் பொங்கிலியப்பன் தலைமையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கோவை சிரவை ஆதினம், பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார், இந்து சமய அறநிலையத்துறை ஸ்தபதி தட்சிணாமூர்த்தி, பழனி கோவில் குருக்கள் கும்பேஸ்வரர், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி. செந்தில்குமார், பழனி நகர்மன்றத்தலைவர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட 15பேர் உள்ளனர்.

இந்த குழுவானது பழனி கோவில் கருவறை மற்றும் மூலஸ்தானத்தில் செய்யவேண்டிய பணிகள் மற்றும் நவபாஷாண முருகனின் திருமேனியை பாதுகாக்கும் வகையில் பணிகள் குறித்தும், ஆகம விதிகளுக்கு உட்பட்டு ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க | ஒட்டியம்பாக்கத்தில் நடந்த பாலாபிஷேக விழா.....

கும்பாபிஷேகம் தொடர்பாக சிலை பாதுகாப்பு குழுவினர் பலமுறை மலைக்கோவிலுக்கு சென்று வந்தனர். இதைத்தொடர்ந்து கும்பாபிஷேகம் பணிகள் நிறைவடைந்து ஜனவரி 28ம் தேதி காலை கும்பாபிஷேகமும் நிறைவடைந்தது.

இந்நிலையில் கும்பாபிஷேகம் நடப்பதற்கு முந்தைய நாளான கடந்த 26ம்தேதி வியாழக்கிழமை இரவு  சிலை பாதுகாப்பு கமிட்டியை சேராத சிலர் கோவில் கருவறைக்குள் சென்று வந்ததாக கூறி பக்தர்கள் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க | 16 ஆண்டுகளுக்கு பின் வெகுவிமர்சையாக நடைபெற்றது...பழனி கோவில் கும்பாபிஷேகம்!

அந்த வீடியோவில் பழனி கோவில் கருவறை நுழையும் வாசற்படியில் அமைச்சர் சேகர்பாபு சட்டை அணியாமல் நிற்பதும், உள்ளே குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட சிலர் நிற்பது தெரிகிறது. தொடர்ந்து மற்றொரு வீடியோவில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி மற்றும் சிலர் வெளியே வருவதும் தெரிகிறது.

இதையடுத்து கருவறைக்குள் சிலர் சென்றதாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி பாலதண்டாயுதபாணி பக்தர் பேரவை தலைவர் செந்தில்குமார் மற்றும் சில உள்ளூர் பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | விழாக்கோலம் பூண்ட பழனி...குவியும் திரளான பக்தர்கள்...!

மேலும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், கோவில் இணை ஆணையர் நடராஜன் ஆகியோரிடம் வாக்குவாதம் செய்வதும், தொடர்ந்து நீங்கள் செய்வது தவறு என்றும், இதுவரை பழனி கோவில் வரலாற்றில் நடக்காத சம்பவங்கள் அனைத்தையும் ஆகமவிதியை மீறி செய்கிறீர்கள் என்றும், இதை பழனியாண்டவன் பொறுத்துக்கொள்ள மாட்டான் என்றும் ஆவேசமாக கத்தி கோஷமிடும் வீடியோ வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க | 16 ஆண்டுகளுக்குப் பிறகு...நாளை நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வு...ஆராவாரம் கொண்ட பக்தர்கள்...!

தொடர்ந்து கருவறை முன்பு நீதிபதிகளை எதற்கு அழைத்து வந்துள்ளீர்கள், முருகன் என்ன காட்சிப்பொருளா? என்றும், அவர்களுடன் வந்த பழனி கோவில் அர்ச்சகர் ஒருவரிடம் வாக்குவாதம் செய்து சாபம் விடுவதுமாக முடிகிறது அந்த வீடியோ.

பழனி கோவில் கும்பாபிஷேகம் நடப்பதற்கு முன்பு கருவறைக்குள் ஆகம விதிகளை மீறி பலரும் நுழைந்ததாக வரும் தகவல்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகம விதிகளை மீறி அர்த்த மண்டபத்திற்குள் சிலர் நுழைந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | தமிழ்நாடு அரசுத்துறைகளின் சாதனைகளை விளக்கும்...அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு...!