எச்சரிக்கை சென்னை மக்களே!  - வானிலை மையத்தின் முக்கிய அறிவிப்பு !!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை உட்ப தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் பெய்த மழையால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. 

எச்சரிக்கை சென்னை மக்களே!  -  வானிலை மையத்தின் முக்கிய அறிவிப்பு !!

பரவலாக மழை

சென்னையில் கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில், இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இம்மழையால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. பயணிகளுடன் சென்னை வந்த பக்ரைன், துபாய் விமானங்கள் ஐதரபாத்திற்கு திருப்பி விடப்பட்டன. மேலும்  சென்னையில் இருந்து மும்பை, டெல்லி, பெங்களூரூ ஆகிய நகரங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில் 10 க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன.

சென்னையின் புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. சாலைகளில் மழைநீர்  பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். சிலபகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் குடியிருப்பு வாசிகளும் அவதிக்கு ஆளாகினர்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், பூந்தமல்லி டிரங்க் சாலை முழுவதும் மழைநீர் செல்ல வழியில்லாமல் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

திடீர் கனமழை

காஞ்சிபுரத்தில் காலை முதலே வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தது. ஓரிக்கை, பெரியார்நகர், செவிலிமேடு, பூக்கடைசத்திரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

மேலும் படிக்க : என் பக்கம் யார் இருக்கிறார்கள் என்பது பரம ரகசியம் - ஓ.பன்னீர்செல்வம்

மதுரையில் 2வது நாளாக நேற்றும் கனமழை வெளுத்து வாங்கியது. மதுரை பெரியார் பஸ் நிலையம், எல்லீஸ்நகர் சாலை, காளவாசல், கோரிப்பாளையம், தல்லாகுளம், அண்ணாநகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால், ஒருசில இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது. நகரின் முக்கிய வீதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகினர். 

இன்றும் தொடரும்

இதனிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருச்சி, நீலகிரி, கோவை உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.