நீட் தேர்வு வேண்டாம் என்றே பெரும்பாலானவர்கள் கருத்து கூறியுள்ளனர்: ஏ.கே.ராஜன்

நீட் தேர்வு வேண்டாம் என்றே பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு வேண்டாம் என்றே பெரும்பாலானவர்கள் கருத்து கூறியுள்ளனர்: ஏ.கே.ராஜன்

தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கத்தினை ஆய்வு செய்து அறிக்கை வழங்கிட உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான 8 பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவை தமிழக அரசு நியமித்திருந்தது. இக்குழுவின் இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்கக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகள் மூலம் கிடைத்திருக்கும் தகவல்களை ஆய்வு செய்து அறிக்கை தயாரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நீதிபதி ஏ.கே.ராஜன், பொதுமக்களிடமிருந்து இதுவரை 25 ஆயிரம் தரவுகள் மின்னஞ்சல், கடிதம் வாயிலாக ஆணையத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள தரவுகளில் பெரும்பாலானவை நீட் தேர்வு வேண்டாம் என்றே கருத்து தெரிவித்துள்ளதாகவும் கூறினார். மேலும், ஆணையத்திற்கு அரசு ஒரு மாதம் மட்டுமே காலக்கெடு நிர்ணயித்திருப்பதால், விரைவாக பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தேவைப்பட்டால் காலக்கெடுவை நீட்டிக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.