முருகேசன் - கண்ணகி தம்பதி ஆணவக்கொலை வழக்கில் பெண்ணின் அண்ணனுக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...

விருத்தாசலம் முருகேசன் - கண்ணகி தம்பதி ஆணவக்கொலை வழக்கில் பெண்ணின் அண்ணனுக்கு தூக்கு தண்டனை வழங்கி கடலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

முருகேசன் - கண்ணகி தம்பதி ஆணவக்கொலை வழக்கில் பெண்ணின் அண்ணனுக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...

விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் புதுக்காலனியை சேர்ந்தவர் முருகேசன். பொறியியல் பட்டதாரியான இவர், மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த கண்ணகி என்ற பெண்ணை காதலித்து, பெற்றோர் சம்மதமின்றி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக விவரமறிந்த பெண்ணின் பெற்றோர், தலைமறைவாக இருந்த முருகேசன் - கண்ணகி தம்பதியை பிடித்து வந்து, கடந்த 2003ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி, அவர்களது மூக்கு மற்றும் காது வழியாக விஷத்தை செலுத்தி கொலை செய்துவிட்டு, சடலங்களை தனித்தனியாக எரித்துள்ளனர். 
 
இதுதொடர்பான புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், விருத்தாசலம் காவல்துறையினர் சம்பவத்தை மூடி மறைக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதை தொடர்ந்து, இரு தரப்பில் இருந்தும் தலா 4 பேர் கைது செய்யப்பட்டனர்.  இந்நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை எழுந்த நிலையில், வழக்கு கடந்த 2004ஆம் ஆண்டு சிபிஐக்கும் மாற்றப்பட்டது. அப்போதே சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.  

குற்றப்பத்திரிகையில் விருத்தாசலம் காவல் நிலைய ஆய்வாளர் செல்லமுத்து , உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரை வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 15 பேரில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தெரிவித்தது. இதனையடுத்து பெண்ணின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பெண்ணின் தந்தை துரைசாமி உட்பட 12 பேருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் உடந்தையாக இருந்த காவலர்கள் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.