கீழக்கரை பகுதியில் பரவும் மர்ம காய்ச்சல்... இரண்டு பள்ளி சிறுமிகள் பலியான சோகம்...

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கீழக்கரை பகுதியில் பரவும் மர்ம காய்ச்சல்... இரண்டு பள்ளி சிறுமிகள் பலியான சோகம்...

இதில் கீழக்கரை வடக்குத் தெருவை சேர்ந்த ஹிபா பாத்திமா வயது (12)7-ஆம் வகுப்பு மாணவிக்கும் புது தெருவைச் சேர்ந்த ஆசியா வயது (7) 2-ஆம் வகுப்பு மாணவி இருவருக்கும் மூன்று தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இருவருக்கும் கீழக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த வந்தனர். காய்ச்சல் குறையவில்லை என்று ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரண்டு மாணவிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே நாளில் இரண்டு மாணவிகள் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கீழக்கரையில் உள்ள அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலை இருந்து வருகிறது. இதனால் காலதாமதமாகி மருத்துவம் அளிக்கும் பட்சத்தில் இதுபோன்ற உயிரிழப்பு ஏற்படக்கூடும் என்று அப்பகுதி மக்களால்  புகார்  கூறப்படுகிறது.

இதுபோன்ற உயிரிழப்புகளை தடுப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து கீழக்கரை அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் செவிலியர்கள் நியமித்து நவீன சிகிச்சை உடன் டெங்கு, மற்றும் இதுபோன்ற மர்ம காய்ச்சலுக்கு கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கீழக்கரை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.