வங்கி கடன் மோசடி செய்து வெளிநாடு தப்பி சென்ற நீரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்சி ஆன்டிகுவாவில் கைது...

வங்கி கடன் மோசடி செய்து வெளிநாடு தப்பி சென்ற நீரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்சி ஆன்டிகுவாவில் கைது...

ஆன்டிகுவாவில் காணால் போனதாக கூறப்பட்ட பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி படகு மூலம் தப்பிச் சென்ற முயன்ற போது பிடிப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்தியாவின் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி விட்டு அதனை திருப்பி செலுத்தாத பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர். இதில் மெகுல் சோக்சி ஆண்டிகுவா நாட்டில் தஞ்சமடைந்த நிலையில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் இரவு விருந்திற்காக சென்ற மெகுல் சோக்சியை காணவில்லை என அவரது வழக்கறிஞர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் மெகுல் சோக்சியை தேடும் பணியில்  ஆன்டிகுவா போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.  

இந்த நிலையில் கரீபியிலுள்ள ஒரு சிறிய தீவு நாடான டொமினிகாவில் இருந்து படகு மூலம் கியூபா நாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது அவரை உள்ளூர் போலீசார் மடக்கி பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது டொமினிகா போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள மெகுல் சோக்ஸியை ஆன்டிகுவா அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு ஆன்டிகுவா அரசிடம் கோரி வரும் நிலையில், அவர் ஆன்டிகுவாவில் இருந்து வேறொரு நாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளது இந்தியாவுக்கு சாதகமாக அமைந்துள்ளதாகவும், விரைவில் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.