ஆட்டோ முன்பதிவுக்கு புதிய செயலியா..? முதலில் கேரளா...அடுத்து தமிழ்நாட்டிலா....?

ஆட்டோ முன்பதிவுக்கு புதிய செயலியா..? முதலில் கேரளா...அடுத்து  தமிழ்நாட்டிலா....?

பொதுமக்கள் ஆட்டோ பயணத்தை முன்பதிவு செய்வதற்கான, செயலியை உருவாக்குவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. 

ஆட்டோ ஓட்டுநர் VS பயணிகள்:

பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து காணப்படுவதால் ஆட்டோக்களில் பயணம் செய்யும் பொதுமக்களிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் பேரம் பேசும் நிலைமை ஏற்பட்டு விடுகிறது. இதனால் பொதுமக்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே கட்டணம் தொடர்பாக மோதல் போக்கு ஏற்படுகிறது. 

ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை:

இருவருக்கும் இடையே  கட்டணம் தொடர்பாக ஏற்படும் மோதல் போக்கினை குறைப்பதற்கு, அரசின் சார்பில் ஆட்டோ முன்பதிவு செயலி ஒன்றை உருவாக்கிட வேண்டும் என  போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்தனர்.

ஆட்டோ முன்பதிவு செயலி எதற்கு?:

ஆட்டோக்களில் பயணம் செய்யும் போது ஓட்டுநருக்கும், பயணிக்கும் இடையே கட்டணம் தொடர்பாக பிரச்சனை ஏற்படுவதை தடுப்பதற்கு இந்த செயலி உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: https://malaimurasu.com/posts/cover-story/Transfer-of-Gratuity-Case-to-3-Judge-Bench

கேரள அரசு:

இதற்கிடையில், கேரள அரசு டாக்சி மற்றும் ஆட்டோக்களுக்கான முன்பதிவு செயலியை சமீபத்தில் தொடங்கி வைத்தது.  இந்த செயலியில் panic பட்டன் உட்பட அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த செயலியில் வாகனங்களை இணைக்க காவல் துறையின் சான்று கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செயலி தொடங்கும் பணிகள் ஆரம்பம்:

அரசின் சார்பில் செயலி ஒன்றை உருவாக்கிட வேண்டும் என  போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று இதற்கான பணிகள் ஆரம்பமாகி உள்ளன. மேலும் கேரளாவில் தொடங்கிய செயலியின் அம்சங்களுடன்,  தமிழ்நாட்டில் ஆட்டோ முன்பதிவு  செயலி தொடங்குவதற்கான  முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  அதேபோன்று, அரசின் இந்த முயற்சி நடைமுறைக்கு வந்தால், மாநிலம் முழுவதும் உள்ள 4 லட்சத்து 50 ஆயிரம் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்தனர். 

திருத்தி அமைக்கப்பட்ட ஆட்டோ கட்டணம் விரைவில்:

தொடர்ந்து, ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைக்க வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளதாக  போக்குவரத்துதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  விரைவில் திருத்தி அமைக்கப்பட்ட ஆட்டோ கட்டணம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனவும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்...