"ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு தடை இல்லை"  உச்ச நீதிமன்றம்...!!

"ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு தடை இல்லை"  உச்ச நீதிமன்றம்...!!

ஜல்லிக்கட்டு, கம்பாளா உள்ளிட்ட விலங்குகளை வைத்து நடத்தப்படும் நிகழ்வுகளுக்கான சட்டத்துக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அதன் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி மாநில அரசின் சட்ட மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியது செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த வருடம் டிசம்பர் மாதம் வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

ஜனவரி மாதம் அதாவது  பொங்கல் பண்டிகையின் போது நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு முன்பாக இத்தீர்ப்பு வழக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதீமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் நீதிபதி கே. எம்.ஜோசப் தலைமையிலான அஜய் ரஷ்டேஜி, அனிருத்தா போஸ், ஹிரிகேஷ் ராய், சி.டி.ரவிக்குமார் ஆகிய 5 பேர் கொண்ட  அமர்வு இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. தொடர்ச்சியாக 7நாட்கள் நடைபெற்ற விசாரணை நிறைவுற்ற நிலையில் தற்போது 5 நீதிபதிகளுக்கான ஒரே தீர்ப்பை நீதிபதி அனிருத்தா போஸ் வாசித்தார்.
 
ஏற்கனவே இந்த வழக்கில் காளைகளும் மனிதர்களும் துன்புறுத்தபடுவதாக விலங்குகள் அமைப்புகள் தங்கள் வாதத்தை முன் வைத்தன. அதற்கு காளைகள் எந்த வகையிலும் துன்புறுத்தப்படவில்லை, அதனை அவர்கள் குடும்ப உறுப்பினர்களாவே வளர்க்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தில் 45அடி உயரத்தில் தடுப்பு அமைத்து ஒரு மாட்டை ஒருவர்தான் பிடிக்க வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

அதுபோக நீதிபதி கே. எம்.ஜோசப்  நாளை பணி ஓய்வு பெறவுள்ள நிலையில் இந்த முக்கியமான தீர்ப்பை வழங்கியது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் 5 பேர் கொண்ட இந்த அரசியல் சாசன தீர்ப்பு இறுதி தீர்ப்பு என்றும் சொல்லி விட முடியாது. விலங்குகள் நல அமைப்பில் சார்பில் Review அதாவது மறு ஆய்வு செய்யப்படும் பட்சத்தில் 7, 9 மற்றும் 13 பேர்  நீதிபதிகளாக கொண்ட அரசியல் சாசனத்திற்கு கொண்டு செல்லப்படும். இறுதியாக 13பேர் கொண்ட அரசியல் சாசன நீதிபதிகள் வழங்கும் தீர்ப்பிற்கு பிறகே எந்த வித மறு ஆய்வுக்கும் உட்படுத்த முடியாது என்ற நிலை ஏற்படும்.

இதையும் படிக்க:கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் இவர்தான்...அதிகாரப்பூர்வமாக அறிவித்தது காங்கிரஸ் தலைமை...!