முக கவசம் அணியாமல் யாரும் வெளியில் செல்ல வேண்டாம்... முன்னாள் அமைச்சர் அறிவுறுத்தல்...

நோய் தொற்று குறைந்து விட்டதாக எண்ணி முக கவசம் அணியாமல் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்று முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

முக கவசம் அணியாமல் யாரும் வெளியில் செல்ல வேண்டாம்... முன்னாள் அமைச்சர் அறிவுறுத்தல்...
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்றத் தொகுதி, அன்னவாசல் ஒன்றியம்,  அன்னவாசல் பேரூராட்சி மற்றும் விளத்துப்பட்டி  ஊராட்சி சித்துபட்டி கிராமத்தில், அமைந்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்கள் இன்று காலை பார்வையிட்டு, பின்னர் நெல் மற்றும் பதர் இரண்டையும் பிரித்தெடுக்கும் இயந்திரத்திற்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு, விவசாயம் தொடர்ந்து செழிக்க வேண்டும், நாடெங்கும் மழை பொழிந்து விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தால் தான் மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று கடவுளை வணங்கி இயந்திரத்தில் நெல்லை கொட்டினார். 
 
கடந்த ஆட்சியில், விராலிமலை தொகுதி முழுவதும் 20 க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
தொடர்ச்சியாக நெல்கொள் முதல் நிலையத்தை பார்வையிட்டு, பின்னர் அன்னவாசல் மற்றும் இடையபட்டியில் அமைந்துள்ள நியாய விலைக்கடைகளுக்கு சென்று தமிழக அரசு வழங்க கூடிய, கொரோனா சிறப்பு நிவாரண நிதி ரூபாய். 2000 மட்டும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கினார்.
 
பின்னர் அனைவரிடமும் கொரோனா காலத்தில்,  பாதுகாப்பாக இருக்கும்படியும், நோய் தொற்று குறைந்து விட்டதாக எண்ணி முக கவசம் அணியாமல் யாரும் வெளியில் செல்ல வேண்டாம்.  குறிப்பாக அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வரிசையில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அனைவருக்கும் முக கவசங்கள் வழங்கி  புறப்பட்டு சென்றார்.