இனி இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு சுங்க வரி செலுத்த வேண்டும்...!!

இனி இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு சுங்க வரி செலுத்த வேண்டும்...!!

ஏழ்மையில் உள்ளவர்களுக்கு இலவச உள் நோயாளிக்கான சிகிச்சை வழங்காத தனியார் மருத்துவமனைகள் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்ய சுங்க வரி விலக்கு வழங்க மறுத்த உத்தரவு சரியானது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையை சேர்ந்த அப்போலோ மருத்துவமனை மற்றும் சேலத்தை சேர்ந்த கோகுலம் மருத்துவமனை ஆகியவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் மருத்துவ உபகரணங்களுக்கு சுங்க வரி செலுத்துவதில் இருந்து மத்திய அரசு விலக்களித்திருந்தது. 1985ம் ஆண்டிலிருந்து 1993ம் ஆண்டு ஆகஸ்ட் வரை சுங்க வரி விலக்கு அமலில் இருந்த நிலையில், வரி விலக்குக்கான விதிகளை பின்பற்றாததால் இனி இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு சுங்க வரி செலுத்த வேண்டுமென மத்திய சுகாதார பணிகளுக்கான இயக்குனர் தெரிவித்திருந்தார்.

இதனை எதிர்த்து அப்போலோ மற்றும் கோகுலம் மருத்துவமனைகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.   அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சுங்க வரி விலக்கு பெறும் மருத்துவமனைகள் இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களை மூலம் ஏழ்மையில் இருக்கும் 40% சதவீத உள் நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பதோடு 10 சதவீத படுக்கையை இலவச சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டுமென விதிமுறைகள் உள்ளதாக கூறினார். 

இந்த விதிகளை இரண்டு மருத்துவமனைகளும் பின்பற்றாதது ஆய்வின் மூலம் தெரியவந்ததை அடுத்தே வரி விலக்கை ரத்து செய்ததாக கூறினார்.  மருத்துவமனைகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களது மருத்துவமனைகள் சார்பில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்களில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், மருத்துவமனைக்கு நோயாளிகள் வரவில்லை என்றால் எவ்வாறு இலவச சிகிச்சை அளிக்க முடியும் என தெரிவித்தார். 

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், பொதுமக்கள் நலனுக்காக விதிகள் வகுக்கப்பட்ட நிலையில் அதனை பின்பற்ற வேண்டுமெனவும் அவ்வாறு பின்பற்றாத நிலையில் வரி விலக்கை ரத்து செய்தது சரியானது என கூறியுள்ள நீதிபதி வரி விலக்கு ரத்தை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிக்க:  சீனாவுடன் உறவு கொண்டாடும் ரஷ்யா... பாதுகாப்பான நண்பனாக கருதும் இந்தியா!!