ஈ.பி.எஸ். கோட்டையில் புகுந்த ஓ.பி.எஸ். : சேலத்தை அதிர வைத்த போஸ்டர்கள் !!

ஓபிஎஸ் ஐயா இன்றி ஓர் அணுவும் அசையாது. எடப்பாடி பழனிசாமியை அதிர வைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்களின் போஸ்டர்

ஈ.பி.எஸ். கோட்டையில் புகுந்த ஓ.பி.எஸ். : சேலத்தை அதிர வைத்த போஸ்டர்கள் !!

அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சனை ஆரம்பித்தது முதலே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே ஈபிஸ் ஆதரவாளர்களும், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் போஸ்டர், பேனர் யுத்தம் தொடங்கிவிட்டனர். ஒற்றைத் தலைமையை ஏற்குமாறு இருதரப்பு ஆதரவாளர்களும் கோரிக்கை வைத்து ஆங்காங்கே போஸ்டர்களை ஒட்டி வந்தனர்.

இந்நிலையில் உள்ளாட்சி அமைப்பு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஏதுவாக தனது நிலையிலிருந்து சிறிது இறங்கி வந்தார் ஓபிஎஸ். எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய அவர் ஏ, பி படிவங்களில் கையெழுத்திட தயாராக இருப்பதாக வெள்ளை கொடிக் காட்டினார்

.

இந்தக் கடிதத்தினால் இருவருக்கும் சமாதானம் ஏற்படும் என்று தோன்றிய நிலையில் மொத்தமாக முட்டுக்கட்டைப் போட்டார் ஈ.பி.எஸ். ஜூன் 23ம் தேதி நடைபெற்ற பொதுக்கு கூட்டத்தில் கழக செயற்குழுவால் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. அதனால், அந்த சட்டத்திருத்தங்கள் காலாவதியாகிவிட்டன. நீங்கள் ஒருங்கிணைப்பாளர் பதவியிலேயே இல்லை என்ற ரீதியில் பதில் கடிதம் அனுப்பியிருந்தார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் என்பதை நீக்கிவிட்டு, தலைமைக் கழகச் செயலாளர் எனது தனது பதவியை மாற்றிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஆதரவாளர்களின் போஸ்டர் யுத்தம் தீவிரமடைந்துள்ளது.  கோயம்புத்தூர் முழுவதும் இபிஎஸ்க்கு  கண்டனம் தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தை பெற கையெழுத்து போட தயார் என ஓபிஎஸ் அறிவித்தபோதும், மறுத்து புரட்சித்தலைவரின் இரட்டை இலை சின்னத்தை முடக்கிய எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனம் என்ற போஸ்டர்கள் கோவை முழுவதும் ஒட்டப்பட்டிருக்கின்றன.

ஆட்டைக்கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் மனுஷனை கடித்த கதையாக எடப்பாடியின் இரும்புக் கோட்டையான அவரது சொந்த ஊரிலேயே அவருக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டவைத்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ஓ.பி.எஸ். எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் கடந்த வாரம் கையில் வேலுடன் சூரசம்ஹாரம் என்று போஸ்டர் அடித்திருந்தனர். அதற்கு பதிலடி கொடுத்துள்ளனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் ஐயா இன்றி ஓர் அணுவும் அசையாது. தொண்டர் சொல் கேளாமல் தன்னிச்சையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமியை கண்டிக்கிறோம் என்று அச்சடித்து போஸ்டர்கள் சேலம் முழுவதும் ஒட்டப்பட்டிருக்கின்றன. ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களால் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.