திருச்சி - சென்னைக்கு இவ்வளவு கட்டணமா..? அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!

திருச்சி - சென்னைக்கு இவ்வளவு கட்டணமா..? அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!

திருச்சியில் இருந்து சென்னை செல்லும் ஆம்னி பேருந்துகளில் இரண்டு மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஆம்னி பேருந்து கட்டணம்:

பொதுவாகவே, ஏதேனும் விசேஷ நாட்கள் வந்தாலோ, தொடர் விடுமுறை வந்தாலோ பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். இந்த தருணத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள நினைக்கும் தனியார் பேருந்து நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை விட இரண்டு மடங்கு மூன்று மடங்கு என அதிகமாக கட்டணம் வசூலிப்பது தற்போது தொடர்கதையாகி வருகிறது.

போக்குவரத்துத்துறை எச்சரிக்கை:

இதனை தமிழக அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. இதனால் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களை ஆய்வு செய்த அமைச்சர் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். 

இதையும் படிக்க: பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுப்பது குற்றமா... ? நீதிமன்றம் சரமாரியான கேள்வி...!

போதுமான அரசு பேருந்துகள் இல்லை:

இருப்பினும்,  கடந்த 3 நாட்களாக முகூர்த்த நாள் என்பதால் பல ஊர்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்கு போதுமான அளவு அரசு பேருந்துகள் இல்லாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

அதிக கட்டணம்:

இதற்கிடையில், தனியார் ஆம்னி பேருந்துகளிலும் கட்டணம் இரண்டு மடங்கு உயர்ந்து காணப்படுகிறது. பொதுவாக 450 முதல் 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தற்போது 800 முதல் ஆயிரத்து 600 வரை வசூலிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். 

பொதுமக்கள் வேதனை:

ஏற்கனவே, ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ள நிலையிலும் கட்டண உயர்வு தொடர்கதை ஆகி வருவது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.