ஆளுநர் எதை பேசினாலும் அதை பொறுத்துக் கொள்ள எங்கள் தோள்கள் மரத்துப் போகவில்லை...! - அமைச்சர் சேகர் பாபு.

ஆளுநர் எதை பேசினாலும் அதை பொறுத்துக் கொள்ள எங்கள் தோள்கள் மரத்துப் போகவில்லை...!  - அமைச்சர் சேகர் பாபு.


சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-24ஆம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் அண்ணாநகர் மேற்குப் பகுதியில், 100 அடி பிரதான சாலையில், நகரும் மின்படிக்கட்டுகளுடன் நடைமேம்பாலம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுவது தொடர்பாக அண்ணா நகர் மேற்கு, கேந்திரிய வித்யாலயா பள்ளி அருகில், 100 அடி சாலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். 

தொடர்ந்து, ஷெனாய் நகரில், 4.5 ஏக்கரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானம், ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படுத்துவது தொடர்பாகவும், கோடம்பாக்கத்தில் உள்ள 1.5 கி.மீ. நீளமுள்ள புலியூர் கால்வாய் கரைகள், ரூ.5 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்தப்படுத்துவது தொடர்பாகவும் ஆய்வு செய்தார்.
உடன் மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், சி எம் டி ஏ செயலாளர் அபூர்வா, சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி,  சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலன், வெற்றி அன்பழகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு,

சட்டமன்றத்தில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் 50 புதிய அறிவிப்புகள் அறிவித்து இருந்ததாகவும், ஒட்டுமொத்த அறிவிப்புகளையும் களத்திற்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஆணைப்படி 14 தொகுதிகளில் ஆய்வு செய்துள்ளதாகவும் கூறினார். மேலும், சட்ட மன்ற உறுப்பினர்கள் 34 கோரிக்கைகள் வைத்து இருந்த நிலையில், அவற்றில்  26 கோரிக்கைகளை ஏற்று ஆய்வு நடத்தி வருவதாகவும் கூறினார்.

பின்னர், அண்ணாநகர் 100 அடி  சாலையில் நகரும் மின்படிக்கட்டுகளுடன் நடைமேம்பாலம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுவது குறித்தும், 4.5 ஏக்கரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படுத்துவது குறித்தும் மழைக்காலங்களில் வெள்ள சேதாரம் ஏற்படாமல் இருக்க  கால்வாய் சீரமைப்பு குறித்தும் ஆய்வு செய்ததாக தெரிவித்தார். 

அதோடு, 1000 கோடி ரூபாய் வரை வட சென்னையை மேம்படுத்த கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தினந்தோறும் ஆய்வுகள், கூட்டங்கள்,  உள்ளிட்டவற்றை நடத்தி பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் விளையாட்டு துறையை பொறுத்த அளவில் தமிழகத்தில் விளையாட்டு துறையை மேம்படுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் கூறினார்.

மேலும், திமுக வை பொருத்தவரை மிருக பலம் கொண்ட இயக்கம் எனவும், யாருடைய ஆதரவையும் கேட்கும் நிலையில் திமுக இல்லை என்றும் கூறினார்.  

மக்கள் பிரதிநிதிக்கு இருப்பது போல் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று தமிழிசை சௌந்தர்ராஜன் சொன்னதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், அவர் அரசியல்வாதியதாக இருக்கும் போது ஒரு நிலையில் இருப்பார். இப்போது ஆளுநராக இருக்கிறார் அதற்கேற்றார் போல் பேசுகிறார் என விமர்சித்தார்.

தொடர்ந்து, மக்கள் பிரதிநிதிகளை மையப்படுத்தி தான் மக்கள் செயல்படுவார்கள் என்றும், நட்பு என்பது வேறு கொள்கை என்பது வேறு; நட்புக்காக கொள்கை விட்டுத் தருவது திராவிட முன்னேற்றக் கழகம் இல்லை என்று ஏற்கனவே முதல்வர் கூறியிருந்ததை சுட்டிகாட்டிக் கூறியிருந்தார். 

மேலும், "ஆளுநர் , ஆளுநர் பவனாக இல்லாமல் அரசியல் பவனாக மாற்றினால் அதற்கு பதில் சொல்ல முடியாது. ஆளுநர் எதை பேசினாலும் அதை பொறுத்துக் கொள்ள எங்கள் தோள்கள் மரத்துப் போகவில்லை. ஆளுநர் ஒன்றும் ஆண்டவர் அல்ல. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுநர் எந்த இயக்கத்தை தூக்கிப் பிடிக்க நினைத்தாரோ அது காலாவதி ஆகும் என்பதை தான் இப்போதே அவர் காலாவதி என்று பயன்படுத்தி இருக்கிறார்", என்று சாடினார். அதோடு, திராவிட முன்னேற்ற கழகம் ஏற்கனவே மதச்சார்பற்ற கூட்டணியோடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திமுக யாரும் தொட்டுப் பார்க்க முடியாத வளர்ச்சியில் உள்ளது. 

 இதையும்  படிக்க     } "பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதே அரசின் நோக்கம்"

ஓ. பன்னீர் செல்வம் சபரீஸன் உள்ளிட்டோரை சந்தித்தது குறித்த கேள்விக்கு, மரியாதை நிமித்தமாக சந்தித்துக் கொண்ட எதிர்பாராத சந்திப்பு தான் என்று பதிலளித்தார். 

நீட் தேர்வு எழுத வந்த மாணவியை உள்ளாடைகளை அகற்ற சொல்லியதாக வெளியான செய்தி குறித்த கேள்விக்கு இது மிகவும் கண்டிக்கத்தக்கது , அதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து உயர்கல்வித்துறை அமைச்சர் எடுப்பார் என்று பதிலளித்தார்.

 இதையும்  படிக்க     } இந்துமதக்கடவுளை இழிவாக பேசியதாக... பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் மீது வழக்கு பதிவு....!