பத்மஷேசாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமீன் மனு தள்ளுபடி...

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பத்மஷேசாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமீன் மனுவை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பத்மஷேசாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமீன் மனு தள்ளுபடி...

பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மஷேசாத்ரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலனை, கடந்த மே 20-ஆம் தேதி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். பின்னர், போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஜூன் 8-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஜாமீன் கோரி ராஜகோபாலன் தாக்கல் செய்த மனு, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பரூக் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புலன் விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளதாகவும், விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையாததால், ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் தெரிவித்தனர்.

ராஜகோபாலன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உள்நோக்கத்துடன் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்றும், ஏற்கெனவே காவல் துறை காவலில் எடுத்து விசாரித்து விட்டதாகவும், ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கத் தயாராக உள்ளதாகவும் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் புலன் விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையாததால், தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி, ராஜகோபாலனின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.