நோயாளிக்கு தலைமை மருத்துவரின் மகன் சிகிச்சை அளித்ததால் பரபரப்பு!

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மகனை சிகிச்சை அளிக்க வைத்த தலைமை மருத்துவர் தினகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நோயாளிக்கு தலைமை மருத்துவரின் மகன்  சிகிச்சை அளித்ததால் பரபரப்பு!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தபாடியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு கவுந்தப்பாடி, அய்யம்பாளையம் உட்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

இந்தநிலையில், வயிற்று வலி காரணமாக கவுந்தப்பாடியை சேர்ந்த முருகேசன் என்பவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பணியாற்றும் தலைமை மருத்துவர் தினகரன் என்பவர் இல்லாதால் அவரது மகன் அஸ்வின் நோயாளிக்கு சிகிச்சை அளித்தாக கூறப்படுகிறது.

மேலும், முருகேசன் இதுகுறித்து அஸ்வினிடம் விசாரித்தபோது தலைமை மருத்துவர் முறையாக விடுப்பு கொடுக்காமல் மருத்துவ பணியாளர்களுடன் ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்றிருப்பதாக தகவல் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.