ஆபத்தை உணராமல் முழ்கும் நிலையில் இருக்கும் தரைபாலத்தின் மீது நின்று செல்பி...

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த் தேக்கத்தை காண, ஆபத்தை உணராமல்  மக்கள் தரை பாலத்தின் மீது நின்று வேடிக்கை பார்த்தும்  செல்பி எடுத்து வருகின்றனர்.

ஆபத்தை உணராமல் முழ்கும் நிலையில் இருக்கும் தரைபாலத்தின் மீது நின்று செல்பி...

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் நீர்த்தேக்கத்தின் அருகே உள்ள பூண்டியில் இருந்து செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கும் நிலையில் உள்ளது.

பூண்டிலிருந்து கிருஷ்ணாபுரம், நம்பாக்கம், வெள்ளது கோட்டை, கம்மவார்பாளையம் அரும்பாக்கம், மேட்டுப்பாளையம், உள்ளிட்ட 30- க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையில் இருந்து நேற்று இரவு ஆயிரம் கன அடியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று மாலை பூண்டி நீர்த்தேக்கத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டால் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து கூடுதலாக தண்ணீர் வெளியேற்ற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது மூழ்கும் நிலையில் உள்ள தரைப்பாலத்தின் மீது நின்றபடி பொதுமக்கள் நீர்த்தேக்கத்தை காண அதிக அளவில் கூடி வருகின்றனர்.

இது தவிர ஆபத்தை உணராமல் தரை பாலத்தின் மீது நின்று புகைப்படங்கள் செல்பிகளை எடுத்தும் வருகின்றனர். இதனால்  அசம்பாவிதம் ஏற்படும் முன்  கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது