வரும் திங்கட்கிழமை விசாரணை...உச்சநீதிமன்றம் அறிவிப்பு...!

வரும் திங்கட்கிழமை விசாரணை...உச்சநீதிமன்றம் அறிவிப்பு...!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்த இடையீட்டு மனுவை, திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்புகள் வெளியாயின. இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் கடந்த 3-ந்தேதி முதல் விசாரணை நடைபெற்றது. 

இதையும் படிக்க : தமிழ்நாடா..? தமிழ்நாய்டா...? மீண்டும் எழுந்த சர்ச்சை...சுட்டிக்காட்டிய இராமதாஸ்...!

அப்போது, இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வு மற்றும் தான் தன்னிச்சையாக நீக்கப்பட்டது செல்லாது என ஓ.பி.எஸ். தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களை அடுத்து 16-ந் தேதிக்குள் இரு தரப்பினரும் எழுத்துப் பூர்வமாக பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி ஓபிஎஸ் தரப்பு ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் 39 பக்கம் கொண்ட பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து, தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை வரும் 30-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.