நிதிநிலை சீரானதும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்.! சட்டமன்றத்தில் அமைச்சர் பிடிஆர் உறுதி.! 

நிதிநிலை சீரானதும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்.! சட்டமன்றத்தில் அமைச்சர் பிடிஆர் உறுதி.! 

தேர்தல் அறிக்கையில் கொடுத்த பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தற்போதைய சூழலில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க சாத்தியமில்லை என்றும், தமிழ்நாட்டில் ஒருவர் ரூ.1 வரி செலுத்தினால் இதில் நான்கு பைசா மட்டுமே தமிழ்நாடு அரசுக்கு வரி கிடைக்கிறது. பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழ்நாடு அரசு குறைத்தால் அதை மத்திய அரசுக்கு விட்டுக் கொடுப்பது போன்றதாகும். வரி பங்கீட்டில் அநீதி நடைபெறுகிறது.

 98 ரூபாய் விற்கப்படும் பெட்ரோல் விலையில் ரூபாய் 70 மத்திய அரசுக்கும், உற்பத்தி செலவுக்கும் செல்கிறது. தமிழ்நாடு அரசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் ரூபாய் 20 மட்டுமே கிடைக்கிறது. வரியை குறைத்தால் ஒன்றிய அரசின் கூடுதல் வரி விதிப்புக்கு ஆதரவாக மாறிவிடும் என தெரிவித்தார். 

திமுக தனது தேர்தல் அறிக்கையில் பெட்ரோல்,டீசல் விலையை குறிப்போம் என்று கூறியிருந்த நிலையில்,  ஆட்சியமைத்ததும் நிதியமைச்சர் இப்படி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் தலைவர்களும் இதை விமர்சித்திருந்தனர். 

இந்நிலையில் சட்டமன்றத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பெட்ரோல் டீசல் விலை குறைப்பு பற்றி கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பெட்ரோல் டீசல் மீதான வரியில் மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய தொகையை ஒன்றிய அரசே வைத்துக்கொள்வதாகவும், பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பில் தமிழ்நாடு 17வது, 18வது இடத்தில் உள்ளதாகவும் கூறினார்.

மேலும் கடந்த 2006-2011-ம் ஆண்டு திமுக ஆட்சி காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்தபோதும், தமிழகத்தில் மூன்று முறை பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட்டதாகவும், தமிழ்நாட்டின் தற்போது நிதிநிலையின் படி வாட் வரியை குறைக்க முடியாது என்றும், மாநிலத்தின் நிதிநிலை சீரானதும் திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு வாக்குறுதியை நிறைவேற்றுவோம்" என்றும் தெரிவித்தார்.