முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்!!

நாடு முழுவதும் கொரோனா தினசரி பாதிப்பு இரண்டு லட்சத்தை நெருங்கி வரும் நிலையில், மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார். 

முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்!!

உலகம் முழுவதையும் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் மிரட்டி கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவிலும் அதிவேகமாக பரவுகிறது. டெல்டா, ஒமிக்ரான் வைரஸ்களால் ஏற்படும் தினசரி பாதிப்பு, கடந்த சில நாட்களாக ஒன்றரை லட்சத்தை தாண்டி வருகிறது.

தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் இதன் வேகம் அதிகமாகவே உள்ளது. இந்தியாவில் நேற்று முன்தினம் மட்டும், ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 720 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 442 பேர் இறந்துள்ளனர். ஒமிக்ரானால் இதுவரையில் மொத்தம் நான்காயிரத்து 800 பேர் பாதித்துள்ளனர். அடுத்து வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, கொரோனாவின் இந்த 3ம் அலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக, பிரதமர் மோடி இருதினங்களுக்கு முன் ஒன்றிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் 15-18 வயதினருக்கு தடுப்பூசி போடுவது, பூஸ்டர் டோஸ் போடுவதை துரிதப்படுத்த வலியுறுத்தினார். இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், முன்னேற்பாடுகள், தடுப்பூசி போடும் நிலவரம், மருத்துவமனைகள் தயார்நிலை உட்பட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். காணொலியில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார்.