பிரதமரின் ஒருநாள் பயணம்....!  'ப்ராப்லம்'  ஆகும் போக்குவரத்து ...!

பிரதமரின் ஒருநாள் பயணம்....!  'ப்ராப்லம்'  ஆகும் போக்குவரத்து ...!

 பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து "வந்தே பாரத் " இரயில் சேவையை தொடங்கி வைக்க இருக்கிறார். அதற்காக இன்று அவர் சென்னைக்கு வருகிறார். அதோடு மேலும் சில நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அவரின்  வருகையை ஒட்டி சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன எனத்  தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கும்  நிலையில், மெரினா கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கலங்கரை விளக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக திருப்பிவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் அங்கிருந்து நடேசன் சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வழியாக வாலாஜா சாலையை அடையலாம் என கூறப்பட்டுள்ளது.
இதேபோல், போர் நினைவிடத்தில் இருந்து வரும் வாகனங்கள், வாலாஜா சாலையில் இருந்து அண்ணா சாலை மார்க்கம் அல்லது திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை மார்க்கத்தில் திருப்பிவிடப்படும் என கூறப்படுகிறது. போர் நினைவிடத்தில் இருந்து கொடி ஊழியர்கள் சாலை வழியாக, அண்ணா சாலைக்கு வாகனங்கள் திருப்பிவிடப்படலாம் என்றும், இந்த மாற்றுப்பாதை இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை செயல்படுத்தப்படும் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
பின்னர் மாலையில் பல்லாவரத்தில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி வருகை தர  இருப்பதால்  பிற்பகல் முதல் பல்லாவரத்திலிருந்து சென்னை விமான நிலையம், கிண்டி மார்க்கமாக செல்லும் வாகன போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்படும்.  GST சாலையில் தாம்பரம், குரோம்பேட்டிலிருந்து- மீனம்பாக்கம், கிண்டி வழியாகச்  செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருநீர்மலை மேம்பாலம் வழியாக திருப்பி விடப்படும் எனவும் தகவல்கள் வந்துள்ளது.  வேளச்சேரி மார்க்கமாகவோ அல்லது துரைப்பாக்கம் மார்க்கமாகவோ சென்னைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம், பல்லாவரம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும்,  வேளச்சேரி பிரதான சாலை வழியாக செல்லவும், செங்கல்பட்டிலிருந்து ஜிஎஸ்டி சாலை வழியாக தாம்பரம் நோக்கி வரும் அனைத்து கனரக வாகனங்களும் வண்டலூர் வெளிவட்ட சாலை வழியாக சென்னைக்கு செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிஷ்கிந்தா சாலையில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் அனைத்து கனரக வாகனங்களும், வெளிவட்ட சாலைவழியாக பூந்தமல்லி நோக்கி செல்லும்படி கூறப்பட்டுள்ளது.   பிரதமரின் வருகையை முன்னிட்டு இன்று பல்வேறு இடங்களில்  வாகனங்கள்  பெரும்பாலும் பாதை மாற்றப்பட்டு திருப்பிவிடப்படும் நிலை உள்ளாகியுள்ளது. இதனால் அன்றாடம்  அலுவல் பணிகளுக்குச்  செல்லும் பயணிகளின் நிலை இன்று சற்று சிரமமாகவே இருக்கும் என கருதப்படுகிறது. இதனால் பயணிகளின் 
பொன்னான நேரம் பாதிக்கப்படலாம் எனவும் கருதப்படுகிறது.