அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை... கல்வித்துறை அமைச்சர் உறுதி...

அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை... கல்வித்துறை அமைச்சர் உறுதி...
திருப்பத்தூர் மாவட்டத்தில், தனியார் பள்ளி சார்பில் கொரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  200 பயனாளிகளுக்கு மளிகை பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.
 
பின்னர் பேசிய அவர், அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்றார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்த்தும் பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு, விரைவாக பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், அதற்கான அறிவிப்பை முதலமைச்சர் விரைவில் வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.  
 
நீட் தேர்வு மட்டுமல்ல, எந்த ஒரு நுழைவுத் தேர்வும் தமிழகத்துக்குள் வராமல் இருக்க, திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் எனக் கூறிய அமைச்சர், இம்மாதம் இறுதிக்குள் பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.