ராஜகோபாலன் மீது குண்டர் தடை சட்டம்... ரத்து செய்ய கோரிய வழக்கில் பதில் அளிக்க உத்தரவு...

மாணவிக்கு பாலியல் தொல்லை வழக்கில் கைதான பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசும்,  சென்னை மாநகர காவல் ஆணையரும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜகோபாலன் மீது குண்டர் தடை சட்டம்... ரத்து செய்ய கோரிய வழக்கில் பதில் அளிக்க உத்தரவு...
ஆன்லைன் வகுப்பில் அரைகுறை ஆடையுடன் வந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி அளித்த புகாரில் சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்திரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினரால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து, ஜூன் 24ஆம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
 
ராஜாகோபாலன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி ஆர்.சுதா உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அவர் மனுவில், மே 24ஆம் தேதி முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரில் இந்திய தண்டனை சட்டம், போக்சோ சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மாணவி அளித்த புகாரில் 2015ஆம் ஆண்டு 11ஆம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம் என குறிப்பிட்டுள்ளதாகவும், அப்போது ஆன்லைன் வகுப்புகளே இல்லாத நிலையில் பொய்யான குற்றச்சாட்டு எனவும், அதன்பின்னர் எவ்வித வழக்குகளும் இல்லாத நிலையில், கணவரை பாலியல் குற்றவாளி என குண்டர் சட்டத்தில் அடைத்தது சட்டவிரோதமென குற்றம்சாட்டியுள்ளார்.
 
தாமதமாக அளிக்கப்பட்ட புகாரில், முழுமையாக உண்மையை கண்டறியாமல் செவி வழி தகவலின் அடிப்படையில் வழக்குப்பதியப்பட்டு உள்ளதாகவும், பெண்களை துன்புறுத்தியதாகவும், பெண்ணினத்தின் கண்ணியத்தை கெடுப்பதாகவும், போக்சோ குற்றம் எனவும் கூறும் குற்றச்சாட்டுகள் தெளிவற்றதாக இருப்பதாக மனைவி சுதா கூறியுள்ளார்.
 
ஜூன் 24 குண்டர் சட்டத்தில் கைது செய்த உத்தரவு தொடர்பான ஆவணங்கால் தங்களுக்கு வழங்கியதில் தாமதிக்கப்பட்டு, ஜூலை 5ஆம் தேதிதான் வழங்கப்பட்டதாகவும், உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அன்றே ஆவணங்களை வழங்காதது சட்டவிரோதமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழக அரசு உள்துறை செயலாளர், சென்னை மாநகர காவல் ஆணையர், புழல் சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.